வழிபாடு

குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் இந்த வருடமும் ஆடித்திருவிழா ரத்து

Published On 2025-07-15 12:25 IST   |   Update On 2025-07-15 12:25:00 IST
  • கோவில் வளாகத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறாது.
  • பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் மிகச்சிறந்த சனி பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கோவில் மண்டபத்தில் புனித நீர் தெளித்து கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கும். அதன் பின் சனீஸ்வரர்-நீலா தேவி திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா, சக்தி கரகம் எடுத்தல், கருப்பண்ணசாமிக்கு மதுபானம் படையல் வைத்தல், பக்தர்களுக்கு கறி விருந்து என 5 வாரங்களும் திருவிழா நடைபெறும்.

இந்த கோவிலை பரம்பரை அறங்காவலர் குழுவினர் நிர்வகித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது.

இதனால் கோவில் நிர்வாகத்தை மீண்டும் அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்தக்கூடாது என கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் கடந்த காலங்களில் ஆடித் திருவிழாவின் போது நடைபெற்ற பூஜைகள் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும். பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் பிறந்தது முதல் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

Tags:    

Similar News