வழிபாடு

திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடக்கம்

Published On 2022-06-25 08:54 GMT   |   Update On 2022-06-25 08:54 GMT
  • ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
  • 2006-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பூந்தமல்லி, திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது.

புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். 2006ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டு ஆகம முறைப்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.

கொரோனா காலம் என்பதால் நடைபெறவில்லை. பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தற்போது பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, திருக்கோவில் பிரகாரத்தை அகலப்படுத்துவது, கோவில் மண்டபம், ராஜகோபுரம், கருங்கல்லால் புனரமைப்பது என ரூ.18 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது.

சுமார் இரண்டு ஆண்டு காலம் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிசேக விழா நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, முன்னாள் அறங்காவலர் லயன். டி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News