வழிபாடு

ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளிய சாமி சிலைகள்

Published On 2022-07-01 12:31 IST   |   Update On 2022-07-01 12:31:00 IST
  • பூஜைகளுக்கு பிறகு சாமி சிலைகள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
  • இன்று கணபதி ஹோமம், சாந்தி ஹோமம், அற்புத சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கும்பாபிஷேக விழா பூஜை நேற்றுமுன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக கும்பாபிஷேக பூஜைகள் நடந்தன. காலையில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து முளபூஜை நடந்தது. பிறகு உதய மார்த்தாண்ட மண்டபத்தில் கலச பூஜை நடத்தப்பட்டது. சாமி சிலைகள் கடந்த 7 ஆண்டுகளாக கோவிலில் திருப்பணி நடந்ததால் பாலாலயத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்த சாமி விக்கிரகங்கள் கோவில் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது முத்துக்குடையுடன் மேள, தாளம் முழங்க, நாராயணா... நாராயணா... நாம கோஷம் எழுப்பப்பட்டது. ஆதிகேசவ பெருமாள் விக்கிரகத்தை மணலிக்கரை மடத்தைச் சேர்ந்த தந்திரி மாத்தூர் சுப்பிரமணியரூவும், ஸ்ரீதேவி விக்கிரகத்தை வாசுதேவகுமாரும், பூதேவி விக்கிரகத்தை கேசவராஜூவும், ஸ்ரீபலி விக்கிரகத்தை கோவில் நம்பியும் ஏந்தி ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு கலச அபிஷேகம் விக்கிரகத்திற்கு நடத்தப்பட்டன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பூஜைகளுக்கு பிறகு சாமி சிலைகள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது லேசாக சாரல் மழை பொழிந்தது.

இந்த நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் அரச பரம்பரை வாரிசு லெட்சுமி பாய் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பகவதி சேவை, குண்ட சுத்தி, முளபூஜை, அத்தாழ பூஜையும், இரவு ஆதிரா வழங்கிய ஆன்மிக சொற்பொழிவு, திருவனந்தபுரம் தியாநாயரின் பரத நாட்டியமும் நடந்தது. கும்பாபிஷேக விழாவின் 3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கணபதி ஹோமம், சாந்தி ஹோமம், அற்புத சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற உள்ளது.

மேலும் கிருஷ்ணன் கோவிலில் தயார் ஆன 7 கிலோ எடை கொண்ட வெள்ளியால் ஆன ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீபலி விக்கிரகம் மற்றும் கோவில் விமானத்தில் பொருத்தப்பட வேண்டிய 7 தங்கமுலாம் பூசப்பட்ட கும்ப கலசங்கள் உபயதாரரிடம் இன்று மாலை 4 மணிக்கு ஆற்றூர் கழுவன் திட்டை சந்திப்பில் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முத்துக்குடையுடன் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக திருவட்டார் பாலம், தபால் நிலைய சந்திப்பு, நான்குமுனை சந்திப்பு வழியாக கோவில் மேற்குவாசல் வழியாக கொண்டு வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

Tags:    

Similar News