வழிபாடு

கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்ட போது எடுத்த படம்.

திருவண்ணாமலை தீப 'மை' ஆருத்ரா தரிசனத்திற்கு பின் பக்தர்களுக்கு வழக்கப்படும்...

Published On 2022-12-19 05:52 GMT   |   Update On 2022-12-19 05:52 GMT
  • ஜனவரி 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
  • ஆருத்ரா தரிசனத்தன்று தீப மை நடராஜருக்கு வைக்கப்படும்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

இந்த மலையின் உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் அன்றில் இருந்து தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது.

மகாதீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடாதுணி (திரி) ஆகியவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபத்திருவிழாவின் போது மகாதீபத்தை நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகாதீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதைகளில் நின்றும் உள்ளூர் மக்கள் அவர்களது வீட்டின் மொட்டை மாடிகளில் இருந்தும் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 30-க்கும் மேற்பட்டவர்கள் தீப கொப்பரையின் பக்கவாட்டில் கம்பு மற்றும் கயிறு கட்டி தோளில் சுமந்தபடி கீழே இறக்கி கொண்டு வந்தனர். மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரும் வழிநெடுகில் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் 'மை' (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப 'மை' பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News