வழிபாடு

அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் `அட்சய திரிதியை'

Published On 2025-04-23 08:54 IST   |   Update On 2025-04-23 08:54:00 IST
  • அட்சய திரிதியை தானத் திருவிழா என்றும் கூறுவர்.
  • சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதி என்பர்.

அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.


அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே.

அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கி பயனடையலாம். உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்.

ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே.


பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்.

கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய' என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான்.

மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.

இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும்.

கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.

Tags:    

Similar News