வழிபாடு

ஆடிப்பூரம்: மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கொடியேற்றம்

Published On 2023-07-14 09:01 IST   |   Update On 2023-07-14 09:01:00 IST
  • 17-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
  • 21-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

ஆடிப்பூரத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலில் உள்ள மட்டுவார் குழலம்மை (அம்பாள்) சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ்வர பூஜை செய்யப்பட்டு கொடி மரத்தின் முன்பு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொடியேற்றப்பட்டது.

இரவில் அம்பாள் கேடயம் வாகனத்தில் புறப்பாடு செய்யப்பட்டு, மலைக்கோட்டை உள்வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் முறையே கமல வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வருகிற 17-ந் தேதி ஆடி அமாவாசை அன்று மலைக்கோட்டை உட்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் ஆடிப்பூரத்தையொட்டி அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது.

21-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. 22-ந்தேதி காலை தீர்த்தவாரியும், இரவில் பூரம் தொழுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News