வழிபாடு

நடராஜர் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் விடிய, விடிய நடராஜருக்கு அபிஷேகம்

Published On 2023-01-06 06:36 GMT   |   Update On 2023-01-06 06:36 GMT
  • இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.
  • 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.

ஆருத்ரா தரிசன விழா சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை

திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து முருகன் சன்னதி அருகே பந்தல் அமைக்கப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன. நள்ளிரவு 12.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் இன்று காலை 5 மணி வரை விடிய விடிய அபிஷேகம் நடந்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் 4 ஆண்டுகளுக்கு பின் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், அம்மாப்பேட்டை சுப்பிரமணியர், மேச்சேரி பசுபதீசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்தனர் .பெண்களுக்கு திருமஞ்சன கயிறு வழங்கப்பட்டது. பஞ்சமூர்த்திகள் விழாவும் நடந்தது.

நாமக்கலில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நடராஜருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டு துறையூர் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

அவர்களுக்கு பிரசாதம் கோவில் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதயொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News