- பாவம் என்பது பரவசக் கனவுகளோடும், அதீத அழகோடும் கண்சிமிட்டும்.
- வசீகரத்தில் வீழ்ந்து விடாமல் ஒதுங்கி இருப்பதே முடிவில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்.
விவிலியத்திலுள்ள இணைத்திருமுறை நூல்களில் ஒன்றான சீராக் நூல் பல்வேறு அற்புதமான சிந்தனைகளை நமக்குத் தருகிறது. அதில் பாவத்தைப் பற்றிய இந்த வசனம் மிகவும் சுவாரஸ்யமானது.
பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர்? காட்டு விலங்குகளின் அருகில் செல்வோர் மீதும் யாரே பரிவு காட்டுவர்?
அவ்வாறே, `பாவிகளோடு சேர்ந்து பழகி, அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது யாரே இரக்கம் காட்டுவர்?' என்கிறது சீராக் (12:13,14) நூல்.
இங்கிலாந்தில் உள்ள ஹேம்ஷைர் பகுதியில் வசித்து வந்தார் டேனியல் பிராண்டன் எனும் 31 வயதான இளைஞர். அவருக்கு பாம்புகளின் மீது அலாதிப் பிரியம். தனது பதின்வயதுகளில் ஒரு மலைப்பாம்புக் குட்டியை எடுத்து வளர்க்கத் துவங்கினார். அப்போது அது அவரது உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதாக இருந்தது. அதனால் 'டைனி' என அதற்குப் பெயரிட்டார். காலம் செல்லச் செல்ல அது வளர்ந்து வலிமையடைந்தது. டேனியலுடன் பாசமாய்ப் பழகியது.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் நாள் இரவு. டேனியேல் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது வேறு யாருமல்ல, அவரது செல்லப்பிராணியான அந்த மலைப்பாம்பு தான். தான் வளர்த்து வருகின்ற மலைப்பாம்புக்குள் இருக்கின்ற ஆபத்தை அவர் அதுவரை உணரவேயில்லை. தனக்கு மிகவும் பழக்கமான பாம்பு தானே என நினைத்தார், ஆனால் பாம்பு தன் இயல்பைக் காட்டியது. அவரை நெரித்துக் கொன்றது.
பாவமும் அப்படியே. பாவிகளோடு சகவாசம் செய்பவர்களுடைய முடிவும் அப்படியே. பாவத்தை விரும்புவோரோடு கலந்திருப்பவர்கள் கடைசியில் பாவத்தினால் அழிகிறார்கள். பாவம் முதலில் அழகாக, கைக்கு அடக்கமாக இருக்கிறது. எளிதில் அதைக் கையாள முடியும்.
ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அந்த பாம்பு விஸ்வரூபம் எடுக்கிறது. நமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாவம், பின்னர் நம்மை அதன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துச் செல்கிறது.
இதை இணைதிருமறையில் வருகின்ற சீராக்கின் ஞானம் நூல் மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. பாம்பாட்டியை பாம்பு கடித்தால் அவருக்காக யாரும் இரங்க மாட்டார்கள். காட்டு விலங்குகளோடு சகவாசம் வைத்திருப்பவர்களை அந்தக்காட்டு விலங்கு சேதப்படுத்தி விட்டால் அதற்காக யாரும் அனுதாபப்பட மாட்டார்கள். வேண்டுமானால் `அறிவிலி' என பட்டம் சூட்டுவார்கள்.
காரணம், காட்டு விலங்குகளுக்கென்று ஒரு இயல்பு உண்டு. என்ன தான் நாம் அதைப் பழக்கினாலும், அது ஏதேனும் ஒரு சூழலில் தன் இயல்பை வெளிக்காட்டி விடும்.
பதின் வயதுகளில் புகை பிடித்தல், மது அருந்துதல், தவறான படங்கள் பார்த்தல் போன்ற பழக்கங்களைத் தொடங்கும் சிறுவர்களின் நிலையும் இது தான். முதலில் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம் என தோன்றும். காலப்போக்கில் அதற்கு அடிமையானபின் வெளிவர இயலாமல் போய்விடும். அந்தப் பழக்கமே கடைசியில் அழிவுக்குக் காரணமாகிவிடும்.
ஒரு தவளையைப் பிடித்து தண்ணீரில் போட்டு மெது மெதுவாகச் சூடாக்கினால் அந்த வெது வெதுப்பில் அது சுகம் காண ஆரம்பிக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சூடு அதிகரிப்பதை உணராது. அதை உணரும் கணத்தில் அது இறந்து போயிருக்கும்.
எலிகளைப் பிடிப்பதற்கான ஒரு வித்தியாசமான பொறி உண்டு. ஒரு பாட்டிலின் உள்ளே தானியம் இருக்கும். தானியத்தை சாப்பிடத்தொடங்கும் எலி அப்படியே பாட்டிலுனுள் விழுந்துவிடும். விழுந்தாலும் தானியம் கிடைக்கிறதே என தொடர்ந்து சாப்பிடும்.
கடைசியில் பாட்டிலின் அடிப்பாகத்தில் சென்று சேரும். வெளியே வரும் வழி தெரியாமல் அங்கேயே இறந்து விடும். பாவம் நம்மை அழைக்கும் போது கொஞ்ச நேரம் பழகிவிட்டு வருகிறேன் என முடிவெடுத்தால், அதுவே நம் அழிவுக்கான பாதையாகி விடும்.
பாவம் நம்மை அழைக்கும்போது நாம் எதிர்திசையில் ஓடித் தப்ப வேண்டும். பாவிகளின் வழியிலேயே நிற்கக் கூடாது. பாவத்தை விட்டும், பாவிகளை விட்டும் விலகிச் செல்ல வேண்டுமென விவிலியம் நமக்கு பல்வேறு வசனங்களின் மூலமாக விளக்குகிறது.
"நீ இள வயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு" என்கிறது 2 திமொத்தேயு 2:22.
"நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்" என்கிறது முதலாம் சங்கீதம்.
சமீபத்தில் சுமார் 5000 பேர்களுடைய 'செத்துப் பிழைத்த' அனுபவக் காட்சிகளை ஆராய்ந்த விஞ் ஞானிகள் சொன்ன ஒரு வாக்கியம் முக்கியமானது. "மரணத்துக்குப் பின் ஏதோ ஒரு வாழ்க்கை இருக்கிறது" விவிலியம் அதை சொர்க்கம், நரகம் என பெயரிட்டு அழைக்கிறது. இவ்வுலகின் சிற்றின்ப மோகங்களில் நீச்சலடிப்பவர்கள், மறு உலகின் பேரின்ப பிரவாகத்துக்குள் நுழைவதில்லை.
பாவம் என்பது பரவசக் கனவுகளோடும், அதீத அழகோடும் கண்சிமிட்டும். வசீகரத்தில் வீழ்ந்து விடாமல் ஒதுங்கி இருப்பதே முடிவில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்.