வழிபாடு

சாக்கிய நாயனார் குருபூஜை

Published On 2024-01-11 08:30 IST   |   Update On 2024-01-11 08:31:00 IST
  • 63 நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார்.
  • இவருடைய பக்தி வித்தியாசமானது.

63 நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார். அவருடைய அவதாரம் மார்கழி பூராடம் நட்சத்திரம். காஞ்சிபுரம் அருகே திருச்சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர். இவருடைய பக்தி வித்தியாசமானது. ஒரு நாள் வெட்டவெளியில் சாக்கிய நாயனார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிபாடு ஏதுமின்றி கிடந்த சிவலிங்கத் திருமேனி தென்பட்டது. அந்த லிங்கத்தை நினைத்து சாக்கிய நாயனார் உள்ளம் உருகினார்.

அதை தூயநீரால் நீராட்டி, மலர்கள் சாத்தி பூஜிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த வெட்ட வெளியில் நீரும் இல்லை, மலர்களும் இல்லை. என்ன செய்வது? ஈசன்மீது கொண்ட அன்பு மிகுதியால், கீழே கிடந்த கல்லை எடுத்து, 'சிவாயநம' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, அதை சிவலிங்கத்தின் மீது வீசினார். தன்னுடைய பக்தன் அன்பினால் தன்மீது கல்லெறிந்தாலும் அதை மலராக ஏற்றுக்கொண்டான் இறைவன்.

இந்தப் பூஜை தினந்தோறும் நடந்தது. சாக்கிய நாயனார், கல் எறிந்து வழிபட்டதாக சொல்லப்படும் சிவபெருமான், காஞ்சிபுரம் அடுத்துள்ள கோனேரிக்குப்பம் என்ற ஊரில் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் அருளும் இறைவனின் திருநாமம், 'வீரட்டானேஸ்வரர்' என்பதாகும்.

சாக்கிய நாயனார் கல் எறிந்ததன் அடையாளமாக, இங்குள்ள லிங்கத்தின் மீது கல் பட்ட வடு புள்ளி புள்ளியாக காணப்படுகிறது. மேலும், இறைவனின் சந்நதிக்கு எதிரில் கையில் கல்லுடன் சாக்கிய நாயனாரின் திருமேனியும் காணப்படுகிறது.அந்த சாக்கிய நாயனாரின் குருபூஜை இன்றைய தினம்.

Tags:    

Similar News