வழிபாடு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

Published On 2022-09-16 07:02 GMT   |   Update On 2022-09-16 07:02 GMT
  • பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரலாம்.
  • 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும்.

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. 21-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல, மகரவிளக்கு சீசன் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து தேவஸ்தான மந்திரி கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்படும். 17-ந்தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு நடை அடைக்கப்படும்.

பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனையொட்டி விலக்கி கொள்ளப்படும்.

வழக்கம்போல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரலாம். முன்பதிவு செய்யாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் உள்பட 12 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News