வழிபாடு

ராமேசுவரம் கோவிலில் நாளை 22 தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை

Published On 2022-06-07 07:22 GMT   |   Update On 2022-06-07 09:28 GMT
  • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது.
  • நாளை கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது.

இன்று மாலை ராமேசுவரம் துர்க்கை அம்மன் கோவில் அருகே ராவண சம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாளை தனுஷ்கோடி பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், ராமர், சீதை, லட்சுமணர் உள்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் நாளை காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு கோதண்டராமர் கோவிலை சென்றடைகிறது.

பட்டாபிஷேக நிகழ்ச்சி முடிந்து மாலை 4 மணிக்கு கோதண்டராமர் கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு திருக்கோவிலை வந்தடைகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுவாமிகள் கோதண்டராமர் கோவிலில் இருக்கும் என்பதால் ராமநாதசுவாமி கோவில் நடைகள் நாளை சாத்தப்படும். இதனால் பக்தர்கள் நாளை சாமி தரிசனம் செய்யவும், 22 தீர்த்தங்களில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News