கொடியேற்றும் நடந்தபோது எடுத்தபடம்.
பத்மநாபபுரம் ராமசாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- நாளை உற்சவபலி தரிசனம், முளபூஜை, புஸ்பாபிஷேகம் நடக்கிறது.
- 29-ந்தேதி ராமபிரானுக்கு தங்க அங்கி சார்த்துதல் நடக்கிறது.
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்ட ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், தொடர்ந்து கோவில் மேல்சாந்தி மனோஜ் வெங்கிடேஸ்வர ஐயர் முன்னிலையில் இடைக்கோடு புதுப்பள்ளி மடம் தந்திரி ஸ்ரீதரருநாராயணரு பூஜைகளை நடத்தினார். காலை 8 மணிக்கு கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் சுதர்சனகுமார், கோவில் ராமயோத்தாஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து களபாபிஷேகம், சாயரட்சை பூஜை, இரவில் திருவிளக்குபூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவானது 30-ந்தேதி வரை நடக்கிறது.விழா நாட்களில் தினமும் திருப்பள்ளி எழுச்சி, கணபதி ஹோமம், உஷபூஜை, தீபாராதனை, நவகலகபூஜை மற்றும் காலை, இரவு வேளைகளில் சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவில் நாளை (சனிக்கிழமை) காலை உற்சவபலி தரிசனம், இரவு முளபூஜை, புஸ்பாபிஷேகம், 27-ந்தேதி மாலை 6.45 மணிக்கு நாகருக்கு பொங்கல் வழிபாடு, 29-ந்தேதி மாலை 5.30 மணிக்கு ராமபிரானுக்கு தங்க அங்கி சார்த்துதல் ஆகியவை நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 30-ந்தேதி காலை 6 மணிக்கு பசுவும் கன்றுடன் சாமி கனிகாணுதல், தொடர்ந்து சாமிக்கு வெள்ளி முகம் சார்த்துதல், மாலை 5.30 க்கு சாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், இரவு 8 மணிக்கு ஆராட்டு தொடர்ந்து வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்ரீராமயோத்தாஸ் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.