பழனியில் பங்குனி உத்திர திருவிழா: நாளை திருக்கல்யாண உற்சவம்
- இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து
- தேரோட்டம் நாளை மறு நாள் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 6-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவிழாவின் சிறப்பு அம்சமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு கவுண்டரில் அனுமதிக்கப்படுகிறது.
நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து ஒரு வழிப்பாதையாகவும், மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் வசதிக்காக கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இடும்பன்குளம், சண்முகாநதியில் பக்தர்கள் நீராடும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவக்குழு வசதி செய்யப்பட்டுள்ளது.
கிரி வீதியில் 28 பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழனி நோக்கி தீர்த்த காவடியுடன் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.