வழிபாடு

பங்குனி உத்திர திருவிழா: பழனி முருகன் கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

Published On 2024-03-24 07:03 GMT   |   Update On 2024-03-24 07:03 GMT
  • வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பழனி:

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் `தீர்த்தக்காவடி திருவிழா' என அழைக்கப்படும் பங்குனி உத்திரம் தனி சிறப்பு வாய்ந்தது. அதாவது கோடை காலமான பங்குனி, சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், இந்த காலத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது பங்குனி உத்திர விழாவின் சிறப்பு ஆகும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந்தேதி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மாலை 7 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'வீர வேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. மகா தீபாராதனைக்குப் பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பங்குனி உத்திர திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்ததை தொடர்ந்து, மண கோலத்தில் சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளினார். முன்னதாக திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளிதேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேர்பவனி தொடங்கியது. சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதிகள் வழியாக சென்று நிலை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்து வந்தும், காவடி சுமந்தும் ஆடிப்பாடியும் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

Similar News