பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் - நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம்
- குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
- குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான்.
திருச்செந்தூர்:
ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்துக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடும் சாஸ்தா கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காதணி விழா நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள குன்றுமேலய்யன் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா, அல்லி ஊத்து கல்லால் அய்யனார், கலியுக வரதர் சாஸ்தா, கற்குவேல் அய்யனார், மருதமலை அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், தலையூன்றி சாஸ்தா போன்ற தங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலில் வழிபாடு செய்தனர்.
குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6மணிக்கு வள்ளியம்மை தபசு காட்சிக்கு எழுந்தருளுதல் நடைபெற்றது.
மாலை 3மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் புறப்பாடு, மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.