வழிபாடு

பக்தர்கள் நடுவில் தேர் அசைந்தபடி வந்த காட்சி.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-04-03 06:15 GMT   |   Update On 2023-04-03 06:15 GMT
  • நாளை அறுபத்து மூவர் விழா நடக்கிறது.
  • 6-ந்தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடக்கிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி கிராம தேவதை பூஜை, கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு நடந்தது.

28-ந்தேதி பங்குனி பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்பகாம்பாள், கபாலீசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பங்குனி பெருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது.

காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன் பிறகு கபாலீசுவரர் தேர் புறப்பட்டது. இந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.

அதன் பிறகு கற்பகாம்பாள் தேர் வந்தது. இதை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் தேர் ஆகியவை வலம் வந்தன.

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வந்தது. தேர் வலம் வந்த போது பக்தர்கள் கபாலி.. கபாலி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வந்தது.

தேர் வலம் வந்தபோது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 மாட வீதிகளின் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் கார்னரில் இருந்து மயிலாப்பூர் மாட வீதிகளுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தேர்த்திருவிழா காரணமாக மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

நாளை (4-ந்தேதி) பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

வருகிற 5-ந்தேதி ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. 6-ந்தேதி பகலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News