பெண்கள் உலகம்
null

புகுந்த வீட்டு பந்தத்தை இனிமையாக்கும் ஆலோசனைகள்

Update: 2022-09-23 05:37 GMT
  • புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது.

ஆண்-பெண் இருவருக்குமே தனது வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இனிமையான உறவை ஏற்படுத்திக்கொள்வது முக்கியமானது. இதனால் கணவன்-மனைவி உறவில் ஆனந்தம் நிலைக்கும். அதற்கான சில ஆலோசனைகள் இங்கே…

முதல் சந்திப்பை இனிமையாக்குங்கள்: யாராக இருந்தாலும், முதல் சந்திப்பு நல்ல முறையில் இருந்தால், நம் மீதான அபிப்ராயமும் சரியாக அமையும். துணையின் பெற்றோரை சந்திக்கும்போது, புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுங்கள். உங்களை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு, இயல்பாக உரையாடுங்கள். அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயலுங்கள். அவர்களின் குடும்பம், விருப்பு - வெறுப்பு, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள். இது இரண்டு தரப்பிலும், இறுக்கமான மனநிலையை மாற்றும்.

உங்களது பெற்றோராக அணுகுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோரை மூன்றாம் நபராகப் பார்க்காமல், உங்களது பெற்றோர்போல் அணுகுவது முக்கியம். குறிப்பாக, துணையின் தாயை, உங்களது தாயைப் போல் நினைத்து பழக வேண்டும். உங்கள் தாயிடம் பேசுவது போல் இயல்பாகவும், நேர்மையான மற்றும் கண்ணியமான அணுகுமுறையுடனும் இருப்பது அவசியம். அவர்களின் இளமைப் பருவம், வாழ்க்கையின் இனிமையான சம்பவங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்த இத்தகைய உரையாடல்கள் உதவும். இதுபோன்று பேசுவதால், எதிர்பார்த்ததைவிட அதிக பிணைப்பை ஏற்படுத்த முடியும்.

மதிப்பளியுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இருக்கும் சமயங்களில், அவர்களின் குடும்ப வழக்கங்களை மதிக்க வேண்டும். அவர்களது கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். அவை புதிதாக இருந்தாலும், அதைக் குறை கூறாமல் ஏற்றுக்கொள்வது அவசியம். புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது அவர்கள் மீதான உங்கள் மரியாதையை வெளிப்படுத்தும். மேலும், அவர்களின் அன்பைப் பெறவும் வழிவகுக்கும். துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது. குறிப்பாகப் பிறர் முன்னிலையில் வாழ்க்கைத் துணையின் பெற்றோருக்குத் தகுந்த மரியாதை அளித்தால், அவர்களுக்கு உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.

அன்பை வெளிப்படுத்துங்கள்: தங்கள் மகன் அல்லது மகளை அவர்களின் வாழ்க்கைத்துணை அதிகம் நேசிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். பிள்ளைகள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய பெற்றோர் விரும்புவது இயல்பு. எனவே, அவர்கள் முன்னிலையில், வாழ்க்கைத் துணையுடன் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உறவுக்கு மனம் திறந்த பேச்சு, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவை அவசியம். தங்கள் பிள்ளைகளின் நலனில் வாழ்க்கைத்துணை அக்கறை செலுத்துவது பெற்றோருக்குப் புரிந்தால், கட்டாயம் உங்கள் மீதான மதிப்பும், அன்பும் அதிகரிக்கும்.

Tags:    

Similar News