வழிபாடு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-5)

Published On 2023-12-21 11:01 IST   |   Update On 2023-12-21 11:01:00 IST
  • ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன்.
  • அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன்.

திருப்பாவை

பாடல்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

மாயாஜாலம் செய்வதில் வல்லவன், வடமதுரையில் பிறந்தவன், தூய்மையான நீர் பெருக்கெடுத்து ஓடும் யமுனைக்கரையில் விளையாடி வாழ்பவன், ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன், தான் பிறந்த தாயின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவன், அவனே தாமோதரன். அப்படிப்பட்ட கண்ணனை, தூய்மையான மனதோடு சென்று அவன் திருவடிகளில் மலர் தூவி வணங்க வேண்டும். வாயினால் அவன் புகழைப்பாடி, மனதினால் தியானித்து வழிபட்டால், நமது பிழைகள் யாவும் நீங்கும். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களும், தொடர்ந்து வருகின்ற பாவங்களும் நெருப்பினில் இட்ட தூசியைப்போல் மறைந்துவிடும். ஆகவே அவன் பெருமைகளைப் பாடுவோம்.

திருவெம்பாவை

பாடல்

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய்

உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

விளக்கம்:

திருமால், நான்முகன் ஆகியோரால் காணமுடியாத இறைவனின் திருப்பாதங்களை, நாம் காணமுடியும் என்று பொய்யாக பிறர் நம்பும் படியாக பாலும், தேனும் ஒழுக பேசிய வாயையுடைய பெண்ணே, கதவைத் திறப்பாயாக! பூமியில் உள்ளவர்களாலும், வானுலகில் உள்ள தேவர்களாலும், பிற உலகத்தில் உள்ளவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன். அவன் எளியவர்களான நம் மீது அன்பும், கருணையும் கொண்டு அருள்புரிகிறான். அவனது பெருங்குணத்தை போற்றுகிறோம். சிவனே... சிவனே.. என்று அவன் திருநாமத்தை உரக்கப்பாடுகிறோம். இதைக்கேட்டும் உணர்ச்சி இல்லாமல் தூங்குகிறாயே! நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை. நீ எப்போதுதான் இதை உணரப்போகிறாய்! எழுந்திரு.!!

Tags:    

Similar News