வழிபாடு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-4)

Published On 2023-12-20 09:51 IST   |   Update On 2023-12-20 09:51:00 IST
  • அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே!
  • ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே!

திருப்பாவை

பாடல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்

கடல் போன்ற நிலையில் அருள் மழை பொழியக்கூடிய கண்ணனே! மழைக்கு அதிபதியாகிய மன்னனே! நீ மழையை பெய்விக்காமல் ஒளிந்து கொள்ளாதே! நீ கடலில் புகுந்து, நீரை முகர்ந்து கொண்டு வானத்தை அடைய வேண்டும். இந்த உலகின் மூல முதல்வனாகிய திருமாலின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறவேண்டும். பெருமையும், எழிலும் பொருந்திய நாராயணனின் கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்ன வேண்டும். அவனது மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கு ஒலிப்பதை போல. இடி இடிக்க வேண்டும். பெருமாளின் சாரங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புபோல உலக மக்கள் யாவரும் வாழும் படியாகவும் நாங்கள் மகிழ்ந்து நீராடுவதற்கு தாமதம் செய்யாமல் மழையை பொழியச் செய்யவேண்டும்.

திருவெம்பாவை

பாடல்

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

விளக்கம்

ஒளி பொருந்திய முத்தினை போன்ற பற்களை கொண்ட பெண்ணே! இன்னுமா உனக்கு பொழுது விடியவில்லை? கிளிபோல பேசும் நம் தோழியர் அனைவரும் வந்துவிட் டார்களா? என்று கேட்கிறாய். இறைவனைப் பாட வந்தவர்களை கணக்கிட்டு சொல்கிறோம். யார் வரவில்லை என்பதை எண்ணிப்பார்த்து சொல்கிறோம் அதற்கு நேரம் ஆகும். அதுவரைக்கும் நீ தூங்கிக்கொண்டு காலத்தை வீணாக்காதே. தேவருக்கு ஒப்பற்ற மருந்தாகவும், வேதங் களின் சிறந்த பொருளாகவும் கண்ணுக்கு இனிமையாகக் காட்சிதரும் சிவனை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கிறோம். ஆகை யால் நீயே வந்து எண்ணிக்கொள். எண்ணிக்கை குறையுமானால் மீண்டும் நீ போய் தூங்கு!

Tags:    

Similar News