வழிபாடு

மகா சிவராத்திரி: சென்னை சிவன் கோவில்களில் இன்று இரவு விடிய விடிய சிறப்பு நிகழ்ச்சிகள்

Published On 2023-02-18 14:49 IST   |   Update On 2023-02-18 14:49:00 IST
  • கோவில் வளாகத்தில் பக்தி சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
  • பட்டிமன்றம், சிவதரிசனம், நாட்டிய சங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன.

மகா சிவராத்திரி விழா இன்று சிவன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள விளையாட்டு மைதானத்தில், இன்று மாலை 6 மணிக்கு மங்கள இசை, திருமுறை விண்ணப்பத்துடன் மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது.

விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மாலை 6.45 மணி முதல் கயிலை வாத்தியம், யோகா சிறப்பு நிகழ்ச்சி, கிராமிய இசை நடனம், கதக் நடனம், சிவதாண்டவ துதி, பட்டிமன்றம், சிவதரிசனம், நாட்டிய சங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன.

கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 5-வது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 24-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டி நாளை (19-ந்தேதி) பால்குட ஊர்வலம், பால் அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி புறப்பாடு, இரவு 10 மணிக்கு கும்பம் இடுதல் நடைபெற இருக்கிறது.

வடபழனி முருகன் கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 8.30 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அதன்பிறகு ஒவ்வொரு 2 மணி நேரத்தில் ஒரு கால பூஜை என தொடர்ந்து 4 கால பூஜைகள் நடக்கிறது.

இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நாகை முகுந்தன் சொற்பொழிவு, பாணிஷ் மாணவர்கள் சுலோக பாராயணம், பேபி தியாவின் பக்தி இசை, கணேஷின் நாமசங் கீர்த்தனம், அபிஷேக் குழு வினர் பக்தி பாடல்கள், சிவசுப்பிரமணிய பாகவதர் குழுவினரின் பஜனைகள் நடக்கின்றன.

சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கங்கை தீர்த்தமும், வில்வ இலையும், கண்டமணி ருத்ராட்சமும் வழங்கப்பட உள்ளது. இன்று இரவு கோவிலுக்குள் 6 கால பூஜையும், கோவில் வளாகத்தில் பக்தி சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜசாமி கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில், பாடி திருவல்லீசுவரர் கோவில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

Tags:    

Similar News