இறைக்கட்டளைகளை ஏற்போம்... (நபி)
- இறைவன் அல்லாஹ் அருள் மிக்கவன்.
- அல்லாஹ் ஈடு இணை இல்லாதவன்.
ஏக இறைவன் அல்லாஹ் அருள் மிக்கவன், தன்னை நாடி வரும் அடியார்களின் குறைகளை தீர்ப்பவன். அவர்களை நல்வழிப்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் நல்வாழ்வு வாழ அருள்புரிபவன். அல்லாஹ் ஈடு இணை இல்லாதவன், எந்த தேவையும் அற்றவன்.
அவன் நாட்டம் இல்லாமல் இந்த உலகில் எதுவும் நடைபெறாது. இத்தனை மகத்துவம் மிக்க இறைவனின் கட்டளைகளை நாம் ஏற்று நடந்தால் நமது வாழ்வு செழிக்கும். இறை கட்டளைக்கு மாறு செய்தால், அவனது கோபத்திற்கு ஆளானால் நம்மை பாதுகாப்பவர்கள் யாரும் இல்லை.
இந்த உலகையும் மனிதர்களையும் இன்னபிற உயிரினங்களையும் படைத்தவன் எவனோ, அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அவை மட்டுமே உண்மையிலும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை சிந்திப்போர் அறியலாம். அதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே அறிவுடைமை. இன்னும் அதுவே நம் வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியவும், அதை பயனுள்ள முறையில் செலவிடவும் உதவும்.
இதை உண்மை சம்பவம் ஒன்றின் மூலம் அறியலாம், வாருங்கள்.....
முன்னொரு காலத்தில் 'ஸமூத்' என்றொரு சமூகத்தைச்சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். இறைவன் அவர் களுக்கு செல்வ வளத்தை வழங்கி இருந்ததால் நல்ல உடல் பலம் மிக்கவர்களாக விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இறைவன் வழங்கிய அருள்களை அனுபவித்த அந்த மக்கள் ஆணவம் கொண்டனர். 'எம்மை யாராலும் அசைக்க முடியாது' என்ற மமதையில் வாழ்ந்தனர். அந்த மக்களுக்கு போதனை செய்வதற்கு இறைவன் "ஸாலிஹ்" என்றொரு நபியை அனுப்பினான்.
அவர் அந்த மக்களுக்குப் போதனை செய்தார். ஆனால், ஆணவமும் அகங்காரமும் கொண்ட அந்த மக்கள் அவரை ஏற்பதாக இல்லை. அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
"இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: 'என் சமூகத்தாரே, அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பாவ மன்னிப்பு தேடுங்கள்;
இன்னும் 'தவ்பா' செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 11:61)
"அதற்கு அவர்கள், 'ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்திலிருக்கிறோம்' என்று கூறினார்கள்". (திருக்குர்ஆன் 11:62)
ஸாலிஹ் நபியை அந்த சமூகத்தில் உள்ள பலவீனமான மக்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர். இதை வைத்து ஆணவக்காரக் கூட்டம் சத்தியத்தை எதிர்த்தது. "நீ ஒரு இறைத்தூதர் தான் என்பதற்கு ஒரு அத்தாட்சி வேண்டும்" என்று கேட்டனர்.
"அதிசயமாக ஒரு கற்பாறையில் இருந்து ஒரு ஒட்டகம் வர வேண்டும்" என்று கேட்டனர்.
ஸாலிஹ் நபி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் கேட்டதைப் போலவே அதிசயமான ஒரு ஒட்டகம் கற்பாறையில் இருந்து வந்தது. இருந்தும் அந்த மக்கள் சத்தியத்தை ஏற்கவில்லை.
ஸாலிஹ் நபி அந்த மக்களைப் பார்த்து ``இது இறைவனின் ஒட்டகம். இதற்கு எந்தத் தீங்கும் செய்து விடாதீர்கள். இந்த ஊரின் கிணற்றில் அதை நீரருந்தவிடுங்கள். பூமியில் அது மேய்ந்து திரியட்டும். அதற்கு தீங்கு செய்தால் இறைவனின் தண்டனை வரும்" என்று எச்சரித்தார்கள்.
இருந்தும் அந்த ஊரில் உள்ள ஒன்பது குழப்பக்காரர்கள் ஒன்று சேர்ந்து அந்த அதிசய ஒட்டகத்தை அறுத்துவிட்டனர். அது மட்டுமின்றி 'நீ எச்சரிக்கை செய்த வேதனையைக் கொண்டு வா பார்க்கலாம்' என்றும் ஸாலிஹ் நபிக்கு சவால் விட்டனர்.
ஸாலிஹ் நபி, 'மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் உண்டு. அதன் பின்னர் நீங்கள் அழிக்கப்படு வீர்கள்' என்று கூறினார்கள். ஸமூத் கூட்டம் தமது கற்குகை வீடுகள் தங்களை பாதுகாக்கும் என்று நம்பினர்.
அந்த மூன்று நாட்களும் நகர்ந்தன. மிகப்பெரும் இடி முழக்கத்தினால் அந்த மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது வீடுகளுக்குள்ளேயே சடலங்களாகக் கிடந்தனர்.
அரேபியாவில் மதாயின் ஸாலிஹ் என்ற பெயரில் இன்றும் கூட அந்த மலைப்பாறை வீடுகள் இருப்பதை நாம் காணலாம். இறை கட்டளையை மீறுபவர்களின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதை இந்த நிகழ்வு மூலம் நாம் அறியலாம். இன்றைய காலக்கட்டத்தில் மக்களில் பலர் பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இறைவன் வழியில் இருந்து விலகிச்செல்கின்றனர். அத்தகையவர்களுக்கு இந்த நிகழ்வு உணர்த்தும் பாடம் தான், இறைக்கட்டளைகளை மதித்திடுவோம், இறையருளை பெற்றிடுவோம்.