வழிபாடு

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது: இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம்

Published On 2024-12-02 11:08 IST   |   Update On 2024-12-02 11:08:00 IST
  • 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
  • அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.

இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.

6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10-ந் தேதி நடைபெறும்.

அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.

மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.

முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.

இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.

கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News