வழிபாடு

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-06-06 08:52 GMT   |   Update On 2023-06-06 08:52 GMT
  • பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.
  • வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உலகப் பிரசித்தி பெற்றது. அத்தி வரதர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் 7-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.

ஐந்து நிலைகள் கொண்ட 76 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் தேரோட்டம் தொடங்கியது. இதனை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர்.

இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.

திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடியில் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் காஞ்சீபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேராட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News