வழிபாடு

குதிரை பொங்கல்

Published On 2024-01-10 10:51 IST   |   Update On 2024-01-10 10:51:00 IST
  • குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
  • குதிரைக்கு பிடித்த உணவுகளை வழங்கி மகழ்ச்சி படுத்துக்கின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடும் தை மாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக நடைபெறும். இந்த நாளில் விவசாயத்திற்கும், தங்கள் தொழிலுக்கும் பெரிதும் உதவும் மாடுகளை சுத்தம் செய்து அதற்கு அலங்காரம் செய்து பிடித்தமான உணவுகளை கொடுத்து பிறந்தநாளில் தங்கள் குழந்தைகளுக்கு செய்யப்படும் விசேஷத்தை போல கொண்டாடுவார்கள்.

இதேபோல் திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து அன்றைய தினம் கொண்டாட்டம் நடத்துவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்லில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம். இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. மலை கிராமங்கள் அதிகம் கொண்ட இங்கு பஸ் போக்குவரத்து கிடையாது. சாலை வசதிகளும் இல்லை. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கும், உரம் மற்றும் இடுபொருட்களை எடுத்துச்செல்வதற்கும் குதிரைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

சிறுமலையில் பலா, வாழை, எலுமிச்சை, மா, சவ்சவ், அவரை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் திண்டுக்கல் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் பெரும்பங்கு வகிப்பது குதிரைகளே. இதனால் அந்த குதிரைகளுக்கு மாட்டுப்பொங்கல் நாளில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

குதிரைகள் அனைத்தையும் சுத்தம் செய்து கலர் பொடிகள் கொண்டு அலங்காரம் செய்து சலங்கைகள் கட்டி விடுகின்றனர். அதன்பிறகு ஊருக்கு பொதுவான இடத்தில் கொண்டுவந்து பொங்கல் வைத்து குதிரைக்கு பிடித்த விதவிதமான உணவுகளை வழங்கி மகழ்ச்சி படுத்துக்கின்றனர். தங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவும் குதிரைகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இதனை தொடர்ந்து தாங்கள் செய்து வருவதாக சிறுமலை கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News