வழிபாடு

சிறப்புகளை வழங்கும் `சித்ரா பவுர்ணமி'

Published On 2025-04-10 08:28 IST   |   Update On 2025-04-10 08:28:00 IST
  • விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபடுங்கள்.
  • சித்திர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் உள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தில், சந்திரனை 'மனதுகாரகன்' என்பார்கள். அவரை 'மதி' என்றும் குறிப்பிடுவர். அந்த மதி நிறைந்த நன்னாளில் நாம் இறைவழிபாட்டை மேற்கொண்டால், நமது மதிப்பும், மரியாதையும் உயரும்.

மக்கள் போற்றும் வாழ்வும் அமையும், மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதம் வரும் பவுர்ணமியை மட்டும், 'சித்ரா பவுர்ணமி' என்று பெயரிட்டு அழைப்பார்கள். சித்திரை மாதத்தில் சூரியன் உச் சம் பெறுவதும், அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியில் சந்திரன் முழுமை அடைவதும்தான் இதற்குக் காரணம்.

எனவே ராஜ கிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் உச்சம் பெற்றும், பலம் பெற்றும் திகழும் சித்திரை மாதத்திற்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்து சித்ரா பவுர்ணமிக்கு விழா எடுத்தனர். இந்த வருடத்திற்கான சித்ரா பவுர்ணமி தினம், சித்திரை மாதம் 29-ம் நாள் (12.5.2025) திங்கட்கிழமை வருகிறது.


சோழர்களும் சித்ரா பவுர்ணமி விழாவைக் கொண்டாடினர். மதுரையிலும் சித்ரா பவுர்ணமி விழாக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருள்வார். சொக்கநாதப் பெருமானும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் வைபவம் நடைபெறும்.

மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவதன் மூலம் நல்ல வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். கிரிவலத்தின் மூலம் நலம்பெற விரும்புவோர் சித்ரா பவுர்ணமி அன்று இரவு மலை வலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

அன்றைய தினம் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபடுங்கள். பாவ புண்ணியங்களை பதிந்துவைப்பவர் சித்ரகுப்தன் ஆவார். அவரை நினைத்து வழிபட்டு 'வருங்காலங் களில் புண்ணியம் அதிகமாக நான் என்ன செய்ய வேண்டும். பாவம் ஏதும் செய்யாமல் இருக்க வழி வகுத்துக் கொடு இறைவா!" என்று பிரார்த்திக்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி ஆகும்.


நமது இல்லத்திலேயே முழுமையாக விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் எற்படும். ஆதாயமும், ஆதரவும் கிடைக்கும்.

செட்டிநாட்டுப் பகுதிகளில் இந்த சித்ரா பவுர்ணமியை சிறப்பாகக் கொண்டாடி, வீடு தோறும் விழா எடுப்பது வழக்கம். பூஜை அறையில் மூல முதற்கடவுளான விநாயகப்பெருமானை மையத்தில் வைத்து, அருகில் வெள்ளி ஏடும், எழுத்தாணியும் வைத்து, 'சித்திர குப்தன் படியளப்பு என்று அதில் எழுதி வைப்பர்.

சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வடியும் பொழுது சித்ர குப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசி கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, திராட்சை, மாம்பழம். முழு நுங்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும்.

அன்றைய தினம் வைக்கும் குழம்பில் தட்டைப்பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயசம் வைத்து, அப்பளம் சுட்டு, இளநீர், பானகம் போன்றவற்றை அருகில் பரப்பி எல்லாவற்றிற்கும் நடுவில் கரகம் வைக்க வேண்டும்

பவுர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமிதான். விரதத்தை முழமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின் உணவு அருந்த வேண்டும்.

நமக்கு எப்பொழுதும் உணவையும், உறைவிடத்தையும், செல்வத்தையும் வழங்குவ தோடு நமது பாவ - புண்ணியத்தையும் பதிந்து வைத்து அடுத்தப் பிறவியிலும் அனுகூலம் தரும் சித்ரகுப்தனை வழிபட்டு செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள வழிவகுப்பதுதான் இந்தப் பவுர்ணமி வழிபாடாகும்.

சித்திர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலிலும் தனி சன்னிதி உள்ளது. பிள்ளையார்பட்டி அருகிலும் தனிக் கோவில் உள்ளது. இந்த ஆலயங்களுக்குச் சென்று சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News