வழிபாடு

கள்ளழகரை பக்தர்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி வரவேற்ற காட்சி.

பக்தர்கள் வெள்ளத்தில் மலைக்கு திரும்பிய கள்ளழகர்: திருஷ்டி பூசணிக்காய் உடைத்து வரவேற்பு

Published On 2023-05-09 08:50 GMT   |   Update On 2023-05-09 08:50 GMT
  • 5-ந்தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
  • நாளை அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது.

மதுரை கள்ளழகர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா வாகும். இந்த திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து 3-ந்தேதி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு புறப்பட்டார். சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி 4-ந்தேதி மதுரை வந்து சேர்ந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாக நின்று கள்ளழகரை தரிசித்தனர்.

மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடி, தல்லாகுளம் பகுதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் எதிர்சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ந்தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து தீர்த்தவாரியும் நடந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், உற்சாக நடனமாடியும் பக்தர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

6-ந்தேதி காலை தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றது.

மறுநாள் (7-ந்தேதி) கள்ளழகர் மோகினி அவதார கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அன்று இரவு 11 மணியளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் விடைபெற்று அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர்களை தூவி உற்சாகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி வழியாக நேற்று இரவு அப்பன் திருப்பதி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை 11.10 மணியளவில் அழகர் இருப்பிடம் சென்றடைந்தார். அழகர் மலைகோட்டை வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அழகரை வரவேற்றனர்.

இதையடுத்து நாளை (10-ந்தேதி) அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News