வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மணல் பரப்பில் அமர்ந்த பக்தர்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2023-07-17 04:12 GMT   |   Update On 2023-07-17 04:12 GMT
  • 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.
  • பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர்.

இந்துக்கள் தை அமா வாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது.

அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.

மேலும் காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் மணல் பரப்பிலும் ஏராளமான புரோகி தர்கள் அமர்ந்து இருந்தனர். இதில் ஒரு சில இடங்களில் 10 முதல் 30-க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர்.

தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றினர். மேலும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிமேற்கொண்டு வருகின்றனர்.

அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்தப்படம்

மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பை கருதி தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று திரளான பக்தர்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் திரண்ட பக்தர்கள் சிவாச்சாரியார்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் காவிரி கரையோர பகுதிகளில் அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

Tags:    

Similar News