வழிபாடு

26.4.2025 ராகு-கேது பெயர்ச்சி

Published On 2025-04-22 08:30 IST   |   Update On 2025-04-22 08:30:00 IST
  • ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை.
  • கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன.

சுபஸ்ரீ விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2025) சனிக்கிழமை மாலை 4.28 மணிக்கு, பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு ராகுவும், உத்ரம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.


ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை, பின்னோக்கிச் செல்கின்றன. ஆனால் இந்த கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன என்பதை அனுபவத்தில் உணரலாம்.

இப்பொழுது நடைபெறும் இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவர். மற்ற ராசிக்காரர்கள் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாட்டையும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்து செய்தால் சந்தோஷத்தை நாளும் சந்திக்கலாம்.

சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அப்பொழுது அதன் சார பலத்திற்கேற்ப உங்களுக்குரிய பலன்கள் வந்துசேரும்.

கடகத்திற்கு அஷ்டமத்து ராகு, கும்பத்திற்கு ஜென்ம ராகு, மகரத்திற்கு அஷ்டமத்து கேது, சிம்மத்திற்கு ஜென்ம கேது என்பதால் மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். மேற்கண்ட ராசிக்காரர்கள் நாக சாந்தி செய்துகொள்வது நல்லது.

11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்குபெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன் பிறகு 8.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு உச்சம் பெற்று, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். தொட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். வருமானம் உயரும்.

6.3.2026 அன்று சனிப்பெயர்ச்சியாகி மீனத்திற்கு செல்கிறார். இதன் விளைவாக மேஷத்திற்கு ஏழரைச் சனியும், சிம்மத்திற்கு அஷ்டமத்துச் சனியும் தொடங்குகிறது. விருச்சிகத்திற்கு அர்த்தாஷ்டமச் சனியும், கடகத்திற்கு அஷ்டமத்துச் சனியும் விலகுகிறது.

இந்த கிரகப் பெயர்ச்சிகளை அடிப்படையாக வைத்து ராகு-கேதுக்களுக்குரிய பலன் எழுதப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள நாக தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம்.

சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில், ராகு- கேதுக்கள் இருந்தால் திருமண வாழ்க்கை தடைப்படும். புத்திரப் பேறில் தாமதம் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய ஜாதகத்தில் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் ராகு-கேதுக்களின் நிலையறிந்து யோகபலம் பெற்ற நாளில், உங்கள் ஜாதகத்திற்கு அனுகூலம் தரும் சர்ப்ப தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அதன் மூலம் தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும்.

ராகு சஞ்சரிக்கும் பாதசார விவரம்

26.4.2025 முதல் 31.10.2025 வரை பூரட்டாதி நட்சத்திரக் காலில் ராகு (குரு சாரம்)

1.11.2025 முதல் 9.7.2026 வரை சதயம் நட்சத்திரக் காலில் ராகு (சுய சாரம்)

10.7.2026 முதல் 12.11.2026 வரை அவிட்டம் நட்சத்திரக் காலில் ராகு (செவ்வாய் சாரம்)

கேது சஞ்சரிக்கும் பாதசார விவரம்

26.4.2025 முதல் 27.6.2025 வரை உத்ரம் நட்சத்திரக் காலில் கேது (சூரிய சாரம்) 28.6.2025 முதல் 5.3.2026 வரை பூரம் நட்சத்திரக் காலில் கேது (சுக்ர சாரம்) 6.3.2026 முதல் 12.11.2026 வரை மகம் நட்சத்திரக் காலில் கேது (சுய சாரம்)

Tags:    

Similar News