வழிபாடு
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடந்த காட்சி.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 16-ந்தேதி தேரோட்டம்

Update: 2022-04-09 04:55 GMT
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் சிகர விழாவான தேரோட்டம் 16-ந்தேதி காலை 6.10 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவம்  சாதாரணமாக நடைபெற்றது. தற்போது தொற்று குறைந்து இருப்பதால், இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

இதற்கான கொடியேற்று விழா 7-ம் தேதி நடைபெற்றது. பின்னர் உற்சவருக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இரவில் சூரிய பிரபை வாகனத்தில்  வீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து தினசரி தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, உற்சவர் வெள்ளி, சிம்மம், யாளி, அனுமந்த வாகனம் என்று வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வர இருக்கிறார்.

விழாவில் 11-ந் தேதி (திங்கட்கிழமை) ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

12-ந்தேதி இரவு முக்கிய விழாவாக கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் 13-ந்தேதி மாலை மஞ்சள் நீர் வசந்த உற்சவமும், 14-ந்தேதி காலையில் வெண்ணைத்தாழி உற்சவமும், இரவில் தெருவடைச்சான் உற்சவமும் நடைபெறுகிறது. 15-ந்தேதி வேட்டை உற்சவம், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

தொடர்ந்து, சிகர திருவிழாவான தேரோட்டம் 16-ந்தேதி காலை 6.10 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெற உள்ளது. 17-ந்தேதி மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உலா உற்சவமும், இரவு தெப்ப உற்சவமும், 18-ந்தேதி காலை துவாதச ஆராதனமும் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News