வழிபாடு
தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானையும், தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்

Published On 2022-04-07 11:13 IST   |   Update On 2022-04-07 12:15:00 IST
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய கோவிலாக இக்கோவில் விளங்குகிறது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி குருபகவான் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு முதல்கட்டமாக குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா தொடங்கியது. அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.

அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தெட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 10-ந் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

மே‌ஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும் என்று கோவில் பணியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிக்கலாம்...கேது கிரக தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் கிடைக்க இந்த பரிகாரங்களை செய்யலாம்...

Similar News