வழிபாடு
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

காலசம்ஹாரமூர்த்தி அருளும் திருக்கடையூர் திருத்தலம்

Published On 2022-03-28 07:35 GMT   |   Update On 2022-03-28 07:35 GMT
சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் கால சம்ஹார பெருவிழாவும், சித்திரை பவுர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் காலசம்ஹார மூர்த்தி ஆவார். இக்கோவில் இறைவியை அமிர்தவல்லி, அபிராமி என அழைக்கிறார்கள். கொன்றை மரம், வில்வம் ஆகியவை இத்தலத்தின் விருட்சங்களாகும்.

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 47-வது தலமாகும். தேவார சிவத்தலங்கள் 276-ல் 110-வது தலமாகும். 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடமாகும். அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாகும் (எமனை சம்ஹாரித்த தலம்). தருமபுரம் ஆதீனத்துக்கு கீழ் செயல்படுகிறது இக்கோவில்.

அமிர்தகடேஸ்வரர் உயர்ந்த சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவன் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் கால சம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் பாலாம்பிகையுடன் காட்சி அளிக்கிறார். காலசம்ஹார மூர்த்தியின் திருப்பாதங்களின் கீழ் மார்க்கண்டேயர் கை கூப்பிய நிலையில் இருப்பது, எமதர்மன் உதைவாங்கி கீழே விழுந்து கிடப்பது ஆகியன பீடத்தடியில் வெள்ளித்தகட்டால் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது. தீபாராதனை சமயம் இதை தரிசிக்கலாம்.

எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும் மேனியில் ஒரு தழும்பும் காணப்படுகிறது. கால சம்ஹார மூர்த்தியின் பின்னால் வலப்பக்கம் மிருத்யுங்கிய யந்திரம் உள்ளது.

தருமராஜரை வதம் செய்ததால் பூமி பாரம் குறைக்க எம சிட்சை வேண்டும் என பூமாதேவியும், திருமாலும், நான்முகனும் பிரார்த்திக்க, ஈசன் எமனை உயிர்ப்பித்தார். இறைவனின் அருளை பெற்ற தர்மராஜா காலசம்ஹார மூர்த்திக்கு எதிரே கூப்பிய கரங்களுடன் எருமை வாகனத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

இங்குள்ள வில்வவனேஸ்வரர் ஆதிலிங்கம் ஆகும். இங்கு வெள்ளிப்பேழையில் உள்ள மரகதலிங்கத்திற்கு காலை, மாலை ஆராதனை நடைபெறுகிறது. 63 நாயன்மார்களில் குங்கிலிய நாயனார், காரிய நாயனார் சிவதொண்டு ஆற்றிய இடமாக திகழ்கிறது.

இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது சிறப்புடையது. சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் கால சம்ஹார பெருவிழாவும், சித்திரை பவுர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கோவிலுக்கு சோழர், பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள்.

‘அஷ்ட வீரட்டானம்’ என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற 8 தலங்களை குறிப்பிட பயன்படும் சொல்லாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் நடந்த இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டான தலங்கள் என்று போற்றுவர்.

புராண பெயர்கள்

திருக்கடவூர், வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம் ஆகியன திருக்கடையூரின் புராண பெயர்களாகும்.

பாலகன் வடிவில் முருகப்பெருமான்

அருணகிரிநாதர் திருக்கடையூர் கோவில் முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார். இங்கு முருக பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதி தேவியின் வலப்பக்கம் தாயை தழுவியவாறு காட்சி தருகிறார் .

முருகனை போல் விநாயகருக்கு அறுபடை வீடுகள் உண்டு. அதில் ஒன்று திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்.
Tags:    

Similar News