வழிபாடு
திருப்பதி

ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து

Update: 2022-03-28 07:34 GMT
ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.

அதன்படி தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இதில் மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மை படுத்தப்படும்.

பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது போர்த்தப்பட்டுள்ள பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது.
Tags:    

Similar News