வழிபாடு
பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்த காட்சி.

பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி, தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

Update: 2022-03-28 03:43 GMT
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். மேலும், கோவிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றினார்கள்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன.

திருவிழாவையொட்டி தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். மேலும், பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு கோவிலுக்கு வந்தார்கள். இதில் முகத்தில் நீளமான வேல் அலகு குத்தி கொண்டு வந்தார்கள். இதேபோல் பக்தர்கள் பலர் முதுகில் அலகு குத்தி கொண்டும் கோவிலுக்கு நடந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம், தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பெரிய மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீரை ஊற்றினார்கள். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் பலர் அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர்.

பெரிய மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. விழாவையொட்டி ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது. இதில் விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. 31-ந் தேதி இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மனின் வீதிஉலா நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் காரைவாய்க்கால் மாரியம்மன் வீதிஉலாவும், இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டு இருந்த கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News