ஆன்மிகம்
மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்ட போது எடுத்த படம்.

அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது

Published On 2021-11-20 02:06 GMT   |   Update On 2021-11-20 02:06 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமி மாடவீதி உலா தடை செய்யப்பட்டதால் ஆகம விதிகளின்படி சாமி உற்சவ உலா நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றன.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும், வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 3.30 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி பரணி தீபம் கொண்டு வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது. அதன்பின் உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணிதீபம் கொண்டு வரப்பட்டு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் அருகே வந்து காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்பி பரவசத்துடன் மகாதீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 17-ந் தேதியில் இருந்து நேற்று வரை கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News