ஆன்மிகம்
சூரசம்ஹாரத்தில் சிங்க முகம், எருமை முகத்துடன் தோன்றிய மகிஷாசூரனை அம்மன் வதம் செய்த காட்சி.

குலசை கோவிலில் இன்று மாலை காப்பு அவிழ்ப்பு: நாளையுடன் திருவிழா நிறைவு

Published On 2021-10-16 07:10 GMT   |   Update On 2021-10-16 07:10 GMT
வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை முடித்து கொள்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. வழக்கமாக கடற்கரையில் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டும் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவில் முன்பு சென்றார்.

தொடர்ந்து அங்கு ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத் தால் வதம் செய்தார்.

பின்னர் சிங்க முகமாக உருமாறி மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போர் தொடுப்பதற்காக அம்மனை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷா சூரன் மீண்டும் பெரும் கோபத்துடன் அம்ம னுடன் போர் புரிய வந்தான். அவனை யும் சூலாயுத்தால் அன்னை சம்ஹாரம் செய்தார்.

பின்னர் சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுத்ததால் வதம் செய்தார். பின்னர் கோவில் கலை அரங்கத்தில் அம்மன் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை உற்சவ மூர்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அம்மன் கோவிலை வந்தடைந்த உடன் கொடி இறக்கப்பட்டு காப்பு அவிழ்க்கப்படுகிறது.

வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை முடித்து கொள்கிறார்கள்.

நாளை பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா விழா நிறைவு பெறுகிறது.சூரசம்ஹாரத்தையொட்டி நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்றும், நாளையும் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.

நாளை மறுநாள் (திங்கட் கிழமை) முதல் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News