ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சிக்கு புறப்பட்டதையும், திரளான பக்தர்களையும் படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-10-16 05:49 GMT   |   Update On 2021-10-16 05:49 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா நேற்று நடந்தது. இதில் கொட்டும் மழையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 10-வது நாளான நேற்று நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வில், அம்பு மற்றும் வாள் போன்றவை கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த உற்சவ அம்பாள் முன்பு பூஜையில் வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் அம்மன் வேட்டைக்கு செல்லும் குதிரையை கொலு மண்டபத்துக்கு எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருள செய்து அந்த குதிரைக்கு உணவாக காணம் மற்றும் கொள்ளு படைக்கப்பட்டு இருந்தது. இரவு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

பரிவேட்டை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம் ஆகிய 8 வாசனை திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணியளவில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது அம்மனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்து கொண்டார்.

வாகனத்துக்கு முன்னால் வாள், வில், அம்பு ஏந்தியபடி சென்றனர். இந்த ஊர்வலம் சன்னதிதெரு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், 4 வழிசாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது.

அதன்பிறகு அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர். பின்னர் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையைநோக்கி அம்புகளை எய்தார். இறுதியாக ஒரு தென்னை இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த தென்னை இளநீரை கோவில் ஊழியர் ஒருவர் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பானாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்ததாக கருதப்படுகிறது.

பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் அம்மன் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீதசந்தான கோபாலகிருஷ்ண சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் மீண்டும் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

பரிவேட்டை நிகழ்ச்சி நடந்த போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நிகழ்ச்சியை பார்த்தனர்.

கொரோனா ஊரடங்கினால் பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபட அனுமதிக்கப்படவில்லை.

அம்மன் ஊர்வலமாக சென்ற பாதையில் வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News