ஆன்மிகம்
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2021-10-16 04:22 GMT   |   Update On 2021-10-16 04:22 GMT
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் 48 நாட்கள் விரதம் இருந்து தங்கி சுவாமியை தரிசித்தால் நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்தால் திருப்பதியில் வணங்கிய பயன் கிடைக்கும் என்பதால் தென் திருப்பதி என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முக்கியமாக கொண்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு ஹனுமந்த வாகனம், கருட, சேஷ, யானை போன்ற வாகனங்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, காலை 5-30 மணிக்கு பெருமாள், உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்பக்கம் டிராக்டர் மூலமும், பக்தர்கள் சார்பிலும் தேர் இழுக்கப்பட்டது. பின்புறம் பொக்லைன் எந்திரம் மூலம் தேர் நகர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர், காலை 7 மணிக்கு நிலையை அடைந்தது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நடை திறக்கப்படும் என்றும், சாமியை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 4 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு புண்ணியாக வாசனம், இரவு தீபாராதனையும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கில் பெருமாள் சேவை சாதிக்கிறார். தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.

விழா நாட்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் டோக்கன் வழங்கப்பட்டு பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பக்தர்கள் நின்று செல்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டு இருந்தது.

மேலும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை WWW.gunaseelamtemple.com என்ற கோவில் இணையதளத்தில் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே காணும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News