ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

Published On 2021-10-12 11:13 IST   |   Update On 2021-10-12 13:32:00 IST
2021 -22 மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல-மகர விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த ஆண்டு சாமி தரிசனம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021 -22 மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக 17-ந் தேதி முதல், தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐயப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும்.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Similar News