ஆன்மிகம்
பக்தர்களை நலவழித்துறை ஊழியர்கள் வெப்பமாணி கொண்டு சோதிக்கும் காட்சி.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்

Published On 2020-12-21 05:45 GMT   |   Update On 2020-12-21 05:45 GMT
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் இயங்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிப்பெயர்ச்சி என்கிறோம். சனிப்பெயர்ச்சி அன்று திரளான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் 19-12-2020 முதல் 31-1-2021 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும் சனீஸ்வரர் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி நேற்று சனிக்கிழமை என்பதால், அதிகாலை 3.30 மணி முதல் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் கைகளில், காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கிருமிநாசினியை தெளித்தனர். அவர்களை தொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், பக்தர்களை வெப்பமாணியை கொண்டு சோதித்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்‌‌ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிக்காபட், துணை கலெக்டர் பாஸ்கரன் ஆகியோர், கொரோனா விதிமுறைப்படியும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கும் முறையையும் ஆய்வு செய்து, பக்தர்களின் தரிசனத்திற்கு உதவி புரிந்தனர். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்திருப்பதால், நளன் குளம் மற்றும் பிற தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், தொழில்நுட்ப அதிகாரி சேகர் தலைமையில், சனிபகவன கோவில் முழுவதும். கிருமிநாசினி மற்றும் புகை மருந்து அடித்து சீர்படுத்தினர். நேற்று அதிகாலை முதல் இரவு வரை சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
Tags:    

Similar News