ஆன்மிகம்
சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தபோது எடுத்தபடம்.

கார்த்திகை பிரம்மோற்சவம் 7-வது நாள்: திரிவிக்ரமன் அலங்காரத்தில் பத்மாவதி உலா

Published On 2018-12-11 03:25 GMT   |   Update On 2018-12-11 03:25 GMT
திருச்சானூரில் நடந்து வரும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை வாகனத்தில், ‘திரிவிக்ரமன்’ அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், ‘திரிவிக்ரமன்’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நண்பகல் 12 மணியில் இருந்து 2.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 11 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ஜான்சிராணி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ. செவிரெட்டிபாஸ்கர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.15 மணியளவில் தேரோட்டமும், இரவு குதிரை வாகன வீதிஉலாவும் நடக்கிறது. 
Tags:    

Similar News