ஆன்மிகம்

கடவுளை எப்போது காணமுடியும்?

Published On 2018-12-04 04:11 GMT   |   Update On 2018-12-04 04:11 GMT
உலகத்தில் இரண்டற கலந்திருக்கும் இறைவன் தனியாக பிரிந்து நமக்குக் காட்சி தருவார். அப்போது கடவுளை காணலாம். இதை உணர்த்து ஆன்மிக கதையை பார்க்கலாம்.
சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் தன் மனதில் இருந்த நெடுநாள் சந்தேகத்தை கேட்டான்.

“குருவே! கடவுளை காண முடியுமா?”

சீடனின் கேள்விக்கு பதிலளிக்க விரும்பிய குரு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும், கையில் சிறிது உப்பையும் எடுத்தார். கையில் இருந்த உப்பை சீடனிடம் காட்டி, “இந்த உப்பை உன்னால் பார்க்க முடிகிறதா?” என்றார்.

“ஆம்” பதிலளித்தான் சீடன்.

இப்போது குரு கையில் இருந்த உப்பை, தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போட்டு, கலக்கி விட்டார்.

“இப்போது உன்னால் உப்பை பார்க்க முடிகிறதா?”

சீடனிடம் இருந்து “பார்க்க முடியவில்லை” என்ற பதில் வந்தது.

“அப்படியானால் இந்த தண்ணீரில் உப்பு இல்லையா?” குரு கேட்டார்.

“உப்பு தண்ணீரோடு கலந்துவிட்டது. அதனால் கண்களால் காண முடியவில்லை” என்றான் சீடன்.

இப்போது குரு விளக்கத் தொடங்கினார், “எப்படி உப்பு இருந்தும், அதை கண்களால் காண முடியவில்லையோ அதேபோலத் தான், கடவுள் பிரபஞ்சத்தில் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்திருக்கிறார். அவரை கண்களால் காண முடியாது.”

விளக்கமளித்த குரு, உப்பு கலந்த தண்ணீர் இருந்த பாத்திரத்தை சூடாக்கினார். பாத்திரத்தில் இருந்த நீர் முழுவதும் வற்றி, உப்பு மட்டும் மீதம் இருந்தது.

“இப்போது உப்பை பார்க்க முடிகிறதா?”

“ஆம்.. பார்க்க முடிகிறது”

“தண்ணீரில் உப்பு கலந்தபோது உப்பை காண இயலாததைப் போல, கடவுள் இந்த உலகத்தில் இரண்டறக் கலந்திருப்பதால் அவரைக் காண முடியாது. அதே வேளையில் நம்முடைய உலகப்பற்று குறையும்போது, மனதில் இருந்து உலகியல் எண்ணங்கள் வற்றி மனம் தூய்மை நிலையை அடையும் போது, நம் ஐம்புலன்களும் கட்டுப்படும்போது, உலகத்தில் இரண்டற கலந்திருக்கும் இறைவன் தனியாக பிரிந்து நமக்குக் காட்சி தருவார். அப்போது கடவுளை காணலாம்.”

குருவின் விளக்கத்தால், சீடனின் மனம் தெளிவுபெற்றது.

Tags:    

Similar News