ஆன்மிகம்
இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்

துன்பங்களை அகற்றும் இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்- மேட்டுப்பாளையம்

Published On 2021-09-22 04:47 GMT   |   Update On 2021-09-22 04:47 GMT
இந்த கோவிலில் தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியை சற்று முன் வைத்த நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது இடுகம்பாளையம் கிராமம். இங்கு அனுமந்தராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆலய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கல் சிற்பங்கள் நிறைந்த கொடிமரம் உள்ளது. அதன் அருகே தல விருட்சமாக ஆலமரம் நிற்கிறது. கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால் அனுமன் வீற்றிருக்கும் சன்னிதி உள்ளது.

இந்தப் பகுதி சுமார் 900 வருடங்களுக்கு முன்பு, பசும் சோலைகள் நிறைந்த நந்தவனமாக இருந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில், அவரது குலகுருவான வியாசராஜ தீர்த்தர், இங்கு நடந்தே வந்துள்ளார். அப்போது இங்கு ஒரு ஆளுயர அழகிய பாறை தென்பட்டது. அந்த பாறையில்தான் ராமாயண காலத்தில் அனுமன் அமர்ந்து தியானம் செய்துள்ளார்.

சுயம்புவாக தோன்றிய இந்த பாறை, அனுமனின் அருள் நிறைந்த பாறை என்பதை உணர்ந்த வியாசராஜ தீர்த்தர், அந்த பாறையின் முன்பாக விழுந்து வணங்கினார். அவரின் உத்தரவுப்படியே, இந்தப் பாறையில் அனுமனின் சிலை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அனுமனுக்காக சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு, பொதுமக்களின் பேராதரவால் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

அனுமனுக்கு ‘சுந்தரன்’ என்ற பெயரும் உண்டு. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். சீதாபிராட்டியை தேடி இலங்கை செல்லும் வழியில் அனுமன் பல தடங்கல்களை சந்திக்கிறார். அவற்றை தன் வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி காண்கிறார். அதன் ஒரு பகுதியாகவே இங்குள்ள பாறை மீது அனுமன் வந்து அமர்ந்து தவம் இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள அனுமன் சிற்பத்தில், ஓங்கிய வலது திருக்கரத்தில் தெய்வீக வகையான சுதர்சன ரேகை வடிக்கப்பட்டுள்ளது. இது சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சனரின் சக்தியை குறிப்பதாகும். எனவே அனுமனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள், முற்பிறவியில் செய்த பாவங்கள், இப்பிறவியில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள அனுமனின் திருவுருவத்தில் பல்வேறு தோற்றங்கள், மற்ற கோவில்களில் உள்ள சிற்பங்களை விட மாறுபட்டு உள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு வலிமை பொருந்திய இடது திருவடியை சற்று முன் வைத்த நிலையில் அனுமன் அருள்பாலிக்கிறார். இந்த திருவுருவை வணங்குவோருக்கு நான் என்ற ஆணவம் நீங்கும். நாம் என்ற ஒற்றுமை மனதில் பிறக்கும். இதனால் அவர்களின் தலைமை பண்பு தரணியை ஆளும் என்பது ஐதீகம்.

ராமபிரானின் திருவடிகளை ஏந்திய வலது திருக்கரம், அபய திருக்கரமாக அமைந்துள்ளது. ஓங்கி உயர்ந்து தலைக்குமேல் தூக்கிய திருக்கரம், அடியவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் விளங்குகிறது. தெய்வீகமான சவுகந்திக மலரைக் கொண்டு ராமபிரானின் திருவடிகளை ஆஞ்சநேயர் பூஜித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த வகையில் இந்தக் கோவிலில் அனுமன் தனது திருக்கரத்தில் கவுகந்திக மலரை தாங்கிய திருக்கோலம் உள்ளது. இந்த கோலத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு நோய்கள் நீங்கி சகல சவுபாக்கியங்களும் கைகூடும். இடது தொடையில் ஊன்றிய திருவடி பக்தர்களுக்கு அருளும் வீரத்தினை உணர்த்துவதாக உள்ளது.

இந்த திருத்தலத்திற்கு வந்து அனுமனை வழிபட்டால் கலையாத கல்வியும், நீண்ட ஆயுளும், கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், பிணி இல்லாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் கிடைக்கப்பெறும்.

இந்த கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கிறது. திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு கதலிப்பழம், சுடு பால், பருப்பு, நெய் சாதம், அவல், கல்கண்டு, வெண்பொங்கல், சர்க்கரை, நெய் சாதம், சர்க்கரை பொங்கல், அவல் இனிப்பு, வடை, எலுமிச்சை அன்னம், புளியோதரை சாதம், தயிர்சாதம், தேங்காய் சாதம், சுண்டல் உள்ளிட்ட பொருட்களால் நைவேத்தியங்கள் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் சனிக்கிழமை இந்த கோவிலில் விஷேசமானது. வாரந்தோறும் சனிக் கிழமையில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோவையில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறுமுகையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் இடுகம்பாளையம் அமைந்துள்ளது.
Tags:    

Similar News