ஆன்மிகம்

பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவிடைமருதூர் கோவில்

Published On 2019-03-18 02:29 GMT   |   Update On 2019-03-18 02:29 GMT
திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது. குறிப்பாக ஆலயத்தில் உள்ள பல்வேறு சன்னதிகள், பிரகாரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ரசித்து பார்க்க வைக்கின்றன.
திருவிடைமருதூர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக திகழ்கிறது. குறிப்பாக ஆலயத்தில் உள்ள பல்வேறு சன்னதிகள், பிரகாரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ரசித்து பார்க்க வைக்கின்றன.

இந்த தலத்தில் பிரகாரங்களில் உள்ள மாடங்கள் பிரமிக்க வைக்கின்றன. சோழ மன்னர்களும், வரகுணபாண்டிய மன்னனும் இந்த ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு பிரகாரத்தையும் ரசித்து ரசித்து கட்டியிருப்பது தெரிகிறது.

ஒவ்வொரு பிரகாரத்தின் மாடங்களும், ஒவ்வொரு விதமான பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும். ஆனால் இன்று இந்த மாடங்களில் நெல் மூட்டைகளையும், வைக்கோல் பொதிகளையும் அடைத்து வைத்துள்ளனர். என்றாலும் ஆலயத்தின் மாடங்களின் அழகு கொஞ்சமும் குறையவில்லை.

திருவாவடுதுறை ஆதினம் இந்த ஆலயத்தை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. தூய்மை பணிகளில் மட்டும் இன்னும் சற்று கவனம் செலுத்தினால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

அழகான இந்த ஆலயத்தை முழுமையாக சுற்றி பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது வேண்டும். இந்த ஆலயத்தின் நான்கு புறங்களிலும், நான்கு கோபுரங்களுடன் நுழைவாயில் உள்ளது.

கும்பகோணம்- மயிலாடுதுறை வழித்தடத்தில் இறங்கி நாம் இந்த ஆலயத்திற்கு சென்றால் வடக்கு பக்க நுழைவாயிலுக்கு தான் செல்ல முடியும். ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு திசைக்கு செல்ல வேண்டுமானால், பிரமாண்டமான தீர்த்தக்குளத்தை சுற்றி செல்ல வேண்டும்.

ராஜகோபுரம் அமைந்துள்ள தெரு மிக அகலமாக, மிக நேர்த்தியாக உள்ளது. அந்த தெருவில் எந்த பக்கத்தில் நின்றாலும் ராஜகோபுரத்தை பார்க்க முடியும். வாருங்கள் நாமும் இந்த கோபுரம் வழியாக உள்ளே சென்று ஆலயத்தின் அமைப்பை பார்க்கலாம்.

ராஜகோபுரத்தை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் விநாயகரும், வலது பக்கம் முருகரும் இருப்பதை காணலாம். கோபுரத்தின் கீழ்புற சன்னதியில் பட்டினத்தார் சிலை உள்ளது. இதை கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், பிரமாண்டமான நந்தியை காணலாம். அதை தொடர்ந்து பிரம்மகத்தி தோஷம் நீக்கும் பகுதி உள்ளது. அங்கும் வழிபட்டு உள்ளே செல்ல வேண்டும்.

இத்தலத்தில் நிற்கும் துவாரபாலகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்திற்குள் செல்ல வேண்டும். அங்கிருந்து பார்த்தால் மகாலிங்க சுவாமி நமக்கு அருள்புரிவார்.

இந்த லிங்கம் சுயம்பாக தோன்றியது என்பதால் அதிக சக்தி கொண்டதாக தெரிகிறது. எனவே அந்த மண்டபத்தில் அமர்ந்து தியானம் மேற்கொள்வது மிகுந்த பலன்களை தரும். மகாலிங்கசுவாமியை வழிபட்டபிறகு கருவறையை சுற்றி வரலாம்.

கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர் உள்ளனர். தட்சணாமூர்த்தி அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அதுபோல மகிஷாசூரனை காலில் போட்டு மிதித்தப்படி இருக்கும் துர்க்கையின் சிலையும் மனதை கவர்வதாக உள்ளது.

கருவறையை வலம் வரும்போதே முதல் பிரகாரமான பிரணவ பிரகாரத்தை சுற்றி வரலாம். இந்த பிரகாரத்தில் ஆண்ட விநாயகர் உள்ளார். இவர் தான் முதன் முதலில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டு பலன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவருக்கு தான் இந்த ஆலயத்தின் முதல் பூஜை நடத்தப்படுகிறது. தினமும் இந்த விநாயகருக்கு 6 கால பூஜை செய்யப்படுகிறது. இவரை வழிபட்டு பிரகாரத்தை வலம்வர தொடங்கினால் நிறைய விக்கிரங்கள் வரிசையாக இருப்பதை காணலாம்.

குமாரசுப்பிரமணியர், சண்டி, வீரபத்திரர், சப்தமாதர்கள், ஏகாதசருத்ரர்கள் எனப்படும் மகாதேவர், சிவன், ருத்ரன், சங்கரர், நீலலோகிதர், ஈசனார், விஜயர், பீமர் ஆகியோரை பார்க்கலாம். இவர்களுக்கு பிறகு தேவதேவர், பவோத்பவர், கபாலீஸ்வரர், திரியம்பகருத்ரர் உள்ளனர். அந்த வரிசையின் மூலையில் கலாபலிங்கம் என்ற மிகபெரிய லிங்கம் உள்ளது. அதற்கு அருகில் ஸ்ரீஏகநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

அந்த பிரகாரத்தில் கருவறைக்கு நேர் பின்புறம் சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அதை தொடர்ந்து மருதவானார்-அன்பிற்பிரியாள் சன்னதி மாடியில் இருப்பது போல் வித்தியாசமான அமைப்பில் காணப்படுகிறது.

அதே வரிசையில் மருதமரம் சிற்பம், ஸ்ரீமகாலட்சுமி அமைந்துள்ளது. அதன்பிறகு பஞ்சலிங்கங்கள் சோழலிங்கம், ஜுராதேஸ்வரர், சங்கநிதி, சேரலிங்கம், பாண்டியலிங்கம், காந்திமதி, ஹரிஹரகுனர், விக்னேஸ்வர் ஆகியோரை காணலாம். அதனை தொடர்ந்து 64 நாயன்மார்கள் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வலது பக்கத்தில் அர்த்தநாரீஸ்வரர், உமாமகேஸ்வரி, பராசக்தி, ஸ்ரீகங்கையம்மன் ஆகியோருக்கான சிற்பங்கள் உள்ளன. அந்த வரிசையில் நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. மேலும் பைரவர், உஷாதேவி, சூரியன் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இவற்றை பார்த்து முடிந்ததும் நுழைவாயில் அருகே பாவை விளக்கு இருப்பதை காணலாம். இந்த பாவை விளக்கு மிக பழமையானது. கலை அழகுடன் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கும் சிறப்பு கொண்டது. இதை பார்த்துவிட்டு வெளியில் வந்தால் சித்ர பிரகாரத்திற்கு செல்ல முடியும். அதற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள நவகிரகங்களை சுற்றி வரலாம். இந்த நவகிரகங்கள் வித்தியாசமான அமைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் அனைத்தையும் இந்த பகுதியில் தான் வைத்துள்ளனர். அங்குள்ள துவாரபாலகர்கள் அருகே பின்புறம் வரகுணபாண்டியனின் சிலை அமைந்துள்ளது. பக்தர்கள் எளிதில் பார்க்க முடியாதப்படி ஒரு ரகசிய அறைக்குள் இருப்பது போல அந்த மன்னனின் சிலை இருக்கிறது. பக்தர்கள் இந்த இடத்திற்கு வந்ததும் அதை கண்டுபிடித்து பார்த்தால் இந்த ஆலயத்தை கட்டிய மன்னன் இவன் தான் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

அடுத்து சித்ரகூடம் பிரகாரம் உள்ளது. இதை முன்பு பக்தர்கள் வலம் வரமுடிந்தது. சமீப ஆண்டுகளாக இந்த பிரகாரத்தை வலம் வரும் பக்தர்கள் இந்த பிரகாரத்தில் உள்ள அருமையான சிற்பங்களை சேதம் செய்துவிடும் நிலை ஏற்பட்டது. பல சிலைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து சித்ரபிரகாரத்தை இரும்பு கதவு போட்டு தடுத்துள்ளனர்.

மார்கழி மாதம் மட்டுமே இந்த சித்ரகூட பிரகாரத்தை பக்தர்கள் வலம் வரமுடியும். பக்தர்கள் செல்லாத காரணத்தால் அந்த சிலைகளுக்கு இடையே சிறுசிறு செடிகள் வளர்ந்துள்ளன. ஆதீன நிர்வாகம் இதில் கவனம் செலுத்தினால் தான் சிற்பங்களை காப்பாற்ற முடியும்.

இந்த பிரகாரத்தை சுற்றி வந்தபிறகு அம்மன் சன்னதிக்கு செல்லலாம். அம்மன் சன்னதியும் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் அன்பிற்பிரியாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த அம்மன் சன்னதி பிரகாரத்தில் நாகலிங்கம், சோமலிங்கம், சகஸ்ரலிங்கம், பிரதிஷ்டலிங்கம், வசிஷ்டலிங்கம் ஆகிய பிரமாண்ட லிங்கங்கள் உள்ளன. மற்றொரு பகுதியில் சனி பகவானுக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

அம்மனை வழிபட்டு வந்தால் மூகாம்பிகை அம்மனை தரிசிக்கலாம். அங்கு வழிபாடு செய்துவிட்டு அப்படியே வெளியேறலாம். இல்லையெனில் மூன்றாவது பெரிய பிரகாரமான அஸ்வமேதயாக பிரகாரம் வழியாகவும் வெளியே வரலாம்.

தேரோட்டம்

திருவிடைமருதூரில் தைப்பூச உற்சவம் மற்றும் ஆடிப்பூர உற்சவத்தின்போது தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆடிப்பூர உற்சவத்தின்போது ஆடிப்பூரத்தம்மன் மட்டும் தனித்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தைப்பூச உற்சவத்தில் கோவிலில் உள்ள 5 தேர்களும் வலம் வரும். கடந்த 1936-ம் ஆண்டுக்கு பிறகு தைப்பூச தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது. இதனால் கோவிலுக்கு சொந்தமான 5 தேர்களும் சிதிலமடைந்தன.

இதையடுத்து 80 ஆண்டுகளுக்கு பிறகு 5 தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு தைப்பூச விழா தேரோட்டம் நடந்தது. இதன் பின்னர் ஆடிப்பூர உற்சவ தேரோட்டமும் நடந்தது.

இந்த நிலையில் ஆடிப்பூர உற்சவத்துக்கு என கடந்த ஆண்டு தனியாக புதிய தேர் செய்ய திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவிட்டார். அதன்படி பக்தர்களின் பொருள் உதவியுடன் 45 அடி உயரம், 15 அடி அகலத்தில் ஆடிப்பூர உற்சவத்துக்கு தனியாக தேர் வடிவமைக்கப்பட்டது.

இந்த தேரில் 200 கிலோ எடை கொண்ட 4 இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேரின் மொத்த எடை 4 டன் ஆகும்.

தோஷங்களை போக்க தினமும் சிறப்பு பூஜை

திருவிடை மருதூர் மகாலிங்கம் சுவாமி ஆலயத்தில் தோஷங்களை விரட்டுவதற்காக தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக தேவேந்திரன் நந்தி அமைந்துள்ள பகுதிக்கும், பிரம்மகத்தி சன்னதிக்கு இடையே வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமர சிறு பலகைகள் போட்டு இந்த பூஜை நடத்துகிறார்கள்.

தினமும் காலை 7 மணி, 8 மணி, 9 மணி என மூன்று தடவையாக தோஷ நிவர்த்தி பூஜை நடத்தப்படுகிறது. தினமும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தோஷ நிவர்ததி செய்து கொள்கிறார்கள். சிறப்பு மற்றும் பண்டிகை நாட்களில் இந்த தோஷ நிவர்த்தி பூஜை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே ஆலயத்தில் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ளுங்கள்.

பஞ்சலிங்க தலம்

தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.

கலைக்கூடம்

தெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களா லும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.
வடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார்.

எதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள். அங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.

பாவம் நீங்க வழிபாடு


வரகுணபாண்டிய மன்னன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற்காக இத்தலம் வந்து மகாலிங்கசுவாமியை வழிபட்டான். சிவன் அவனைப் பற்றியிருந்த பிரம்ம ஹத்தியை அகற்றினார். இந்த பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதி இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.
மழை பெய்யும் அதிசயம்

திருவிடைமருதூரில் மேற்கு திசையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

ஆண்ட விநாயகர்

கோவிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள் ளது. இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப் பெயர் உண்டு.

முருகன் சன்னதிகள்

இங்கு கோவிலின் உட்புறத்தில் ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் தேவியர் இருவருடன் மயில் மீது அமர்ந்து முருகன் காட்சி தருகின் றார். அம்பாள் சன்னதியின் நுழைவாயிலில் துவாரமூர்த்தியாகப் பன்னிரண்டு கைகளுடன் முருகன் காட்சி அளிக்கிறார். இவை தவிர பிரணவப் பிரகாரத்தில் ஒரு முருகன் சன்னதியும், தலவிருட்சமான மருதமரத்தின் அடியில் அறுமுகச் சன்னதியும் அமையப் பெற்றுள்ளன. மேற்குக் கோபுரத்தை அடுத்துத் தனி முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

இந்த ஒரு ஆலயத்தில் மட்டுமே ஜோதி தெரிந்தது

ஒரு தடவை சிவபெருமானின் கண்ணை பார்வதி தேவி தம் கைகளால் பொத்தினார். அப்போது உலகமே இருண்டது. பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. ஆனால் திருவிடை மருதூர் தலத்தில் மட்டும் ஜோதி ஒளி பிரகாசமாக தெரிந்தது. இதன் மூலம் உலகில் பிரளயமே ஏற்பட்டாலும் ஈசன் உறைந்துள்ள தலமாக திருவிடை மருதூர் தலம் சிறப்புப் பெற்றுள்ளது.

முக்கியமான 3 பிரகாரங்கள்

இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அஸ்வமேதப் பிரகாரம்:

இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

கொடுமுடிப் பிரகாரம்:

இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

ப்ரணவப் பிரகாரம்:

இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

செல்வது எப்படி?

திருவிடைமருதூர் தலத்துக்கு செல்பவர்கள் காருண்யாமிர்த தீர்த்த குளக்கரையில் உள்ள ஐராவதிஸ்வரர் ஆயலத்தை முதலில் வழிபடவேண்டும் என்பது ஐதீகமாகும்.

திருவிடை மருதூருக்கு செல்ல தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நல்ல வாகன வசதி உள்ளது. கும்பகோணத்துக்கு மிக, மிக அருகில் திருவிடைமருதூர் அமைந்துள்ளதால் பக்தர்கள் முதலில் கும்பகோணத்துக்கு செல்ல வேண்டும்.

கும்பகோணத்தில் குளித்துவிட்டு, புறப்பட்டு செல்ல நிறைய தங்கும் வீடுகள் உள்ளன. பஸ் நிலையம் அருகில் வசதிக்கு ஏற்ப தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழித்தடத்தில் திருவிடைமருதூர் இருக்கிறது. ஆனால் மயிலாடுதுறை செல்லும் ரூட் பஸ்களில் திருவிடை மருதூருக்கு செல்பவர்களை ஏற்ற மறுப்பார்கள். மயிலாடுதுறைக்கு செல்பவர்களை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கண்டக்டர்கள் கெடுபிடி செய்வதுண்டு.

ரூட் பஸ் கிடைக்காவிட்டால் பக்தர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அருகிலேயே டவுன்பஸ் நிலையம் உள்ளது. அங்கிருந்து திருவிடை மருதூருக்கு அடிக்கடி டவுன்பஸ் வசதி உள்ளது.

கும்பகோணம்- திருவிடைமருதூர் இடையே டவுன் பஸ் கட்டணம் 10 ரூபாய்தான். 30 நிமிடங்களில் கும்பகோணத்தில் இருந்து திருவிடை மருதூருக்கு டவுன் பஸ்சில் சென்று சேர்ந்துவிடலாம்.

கும்பகோணத்தில் இருந்து திருவிடைமருதூருக்கு செல்ல கார், ஆட்டோ வசதிகளும் உள்ளன. ஆனால் கட்டணமாக 250 ரூபாய், 350 ரூபாய் என்று கேட்பார்கள். கும்பகோணத்தை சுற்றியுள்ள மற்ற ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்று திட்டத்துடன் இருப்பவர்கள் கார் அல்லது ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம்.

அப்படி இல்லாமல் திருவிடைமருதூர் தலத்துக்கு மட்டும் செல்லும் திட்டத்துடன் இருப்பவர்கள் டவுன் பஸ்சிலேயே சென்று வரலாம். இதன்மூலம் பயணத்துக்கான செலவை பக்தர்கள் கணிசமாக குறைக்க முடியும்.

சென்னையில் இருந்து செல்பவர்கள் கும்பகோணத்தை சென்றடைய ரெயில், அரசு பஸ்கள் நிறைய உள்ளன. ஏ.சி. படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள் கும்பகோணத்துக்கு அதிகாலையில் சென்று வரும் வகையில் தங்கள் பயண திட்டத்தை அமைத்துக் கொண்டால், காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரை சுமார் 4 மணிநேரம் திருவிடைமருதூர் ஆலயத்தில் செலவிட முடியும்.

இந்த 4 மணிநேரத்தில் திருவிடைமருதூர் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியிலும் நின்று நிதானமாக வழிபட்டு வர முடியும். அர்ச்சனை, நட்சத்திரத்துக்கு ஏற்ற தீபம் ஏற்றும் வழிபாடு போன்றவற்றையும் இந்த 4 மணிநேர அவகாசத்தில் முடித்துவிட முடியும்.

மதியம் 12.30 மணிக்கு ஆலயம் நடை சாத்தப்பட்ட பிறகு திருவிடைமருதூரில் இருந்து புறப்பட்டு கும்பகோணத்துக்கு 1.15 மணிக்குள் வந்துவிட முடியும். மதிய உணவை முடித்தபிறகு 2 மணிக்கே சென்னைக்கு புறப்பட்டு விடலாம்.

அன்றிரவே சென்னை திரும்பிவிட முடியும். அதாவது இன்றிரவு புறப்பட்டால் திருவிடைமருதூர் தலத்தில் வழிபட்டு விட்டு மறுநாளே சென்னை திரும்பி வந்துவிடலாம்.

ஆலய முகவரி:

ஸ்ரீ மகாலிங்கசுவாமி ஆலயம்,
திருமஞ்சனம் தெரு,
திருவிடைமருதூர்-612 104.
தஞ்சை மாவட்டம்
தொலைபேசி எண்:-0435- 2460660
Tags:    

Similar News