ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன்

சபரிமலையும்.. சில விரத வழிபாடும்..

Published On 2021-11-20 04:11 GMT   |   Update On 2021-11-20 08:35 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மிகவும் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து செல்வார்கள். அப்படிச் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

பிரம்மச்சரியம்

சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கிறது. ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெறும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோவிலுக்குச் சென்று திரும்பிய பிறகும், ஜனவரி 14-ந் தேதி வரை பிரம்மச்சரிய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

கற்பூர தீபம்

ஐயப்பனை ‘கற்பூர தீபப் பிரியன்’ என்று அழைப்பார்கள். ஐயப்பனுக்கு பிடித்தமான ஆராதனைகளில், தீபாராதனை முக்கியமானது. விரதம் இருந்து வழிபடும் ஒவ்வொரு நாளிலும், பூஜையை தொடங்கும் போதில் இருந்து, முடியும் வரை இறைவனுக்கு தீபாராதனையை காட்டிக்கொண்டே இருக்க ேவண்டும். சபரிமலை யாத்திரையின்போது வழிபாதைகளிலும் கூட, மாலை நேரங்களில் எங்காவது கற்பூரம் ஏற்றி ஐயப்பனின் சரண கோஷங்களை ஒலித்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

இருமுடி

நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜை பொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருளை வைத்துக்கொள்ள வேண்டும். சபரிமலை பயணத்தைத் தொடங்கிய தருணத்தில் இருந்து, இருமுடி தலையிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பான பலனைத் தரும்.

நெய் அபிஷேகம்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், ஆலயத்திற்குள் நுழைந்ததும் தாங்கள் கொண்டு சென்ற நெய் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்புவாா்கள். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் இருந்து ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை அர்ச்சகர் ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும். ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவனை பாயசம் தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது.

கணபதிக்கு நெய் தேங்காய்

சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒருபுறத்தில் எரியும் ஆழித்தீயில் நெய் தேங்காயைப் போடுவார்கள். இது ஐயப்பன் சன்னிதியின் இடதுபுறம் உள்ள கன்னிமூல கணபதிக்கு உரிய வழிபாடாகும். சபரிமலை கோவிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்தியம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்உருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சார்த்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும்.

குருசாமி

சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் ‘குருசாமி’ என்ற தகுதியை பெறுவர். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன் மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News