ஆன்மிகம்

கடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார்

Published On 2018-07-12 07:07 GMT   |   Update On 2018-07-12 07:07 GMT
ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஆடுதுறை ஸ்ரீஜெகத்ரட்சக பெருமாள் கோவில். தமிழில் வையம் காத்த பெருமாள் என அழைக்கின்றனர்.

தாயாரின் பெயர் - ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார். பிரிந்த தம்பதியர், நிம்மதியின்றித் தவிக்கும் தம்பதியர் ஆகியோர் தொடர்ந்து 16 நாட்கள் அல்லது 16 சனிக்கிழமைகள் இங்கு வந்து வெள்ளை மலர் சார்த்தி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, 16 முறை பிரகார வலம் வந்தால், பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்.

இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மிகுந்த விசேஷமானவர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். வடக்கு திசை நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை, செவ்வாய்க்கிழமைகளில் 16 நெய் தீபமேற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். நஷ்டத்தில் இருந்த தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

நல்ல வேலை, பதவி உயர்வு ஆகியவை வேண்டுவோர் பால் பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து, வெள்ளை வஸ்திரம் மற்றும் முல்லை முதலான வெண்மை நிற மலர்கள் சார்த்தி வழிபட்டால்... விரைவில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News