ஆன்மிகம்

இயேசுவின் பிறப்பு உணர்த்தும் ஐந்து விஷயங்கள்

Published On 2018-11-17 06:55 GMT   |   Update On 2018-11-17 06:55 GMT
இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது.
1. அன்பு

‘சக மனிதனை அன்பு செய்யாமல் இறைவனை அன்பு செய்ய முடியாது’ எனும் போதனையை அழுத்தம் திருத்தமாக போதித்தவர் இயேசு. சக மனிதன் மீதான கரிசனம் இல்லாமல் இருப்பவர் களால் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியாது எனும் இவருடைய போதனை அன்பின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாய்ப் போதிக்கிறது. இயேசுவின் செயல்கள், சொற்கள், சிந்தனைகள் எல்லாமே அன்பு எனும் அச்சாணியில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய அன்பு நமக்குள் பிறக்க வேண்டும்.

2. பணிவு

கால்நடைகளுக்கான ஒரு மரத் தீவனத் தொட்டியில் பிறந்து, மரங்களோடு வாழும் ஒரு தச்சனாக வளர்ந்து, சிலுவை மரத்தின் உச்சியில் உயிரை விட்டு, பணிவை தனது வாழ்வால் விளக்கியவர் இயேசு. பசியோடும், சோர்வோடும் வாழ்ந்தாலும் பணிவோடும், துணிவோடும் வாழத் தவறவில்லை. கொலைக்களத்தில் துணிச்சலாய் பேசிய இயேசு, சீடர்களின் கால்களைக் கழுவும் அன்பினைக் கொண்டிருந்தார். தனது கால்களைப் பிறர் கழுவுவதில் அல்ல, பிறருடைய கால்களை தான் கழுவுவது தான் உண்மையான ஆன்மிகம் என்பதை உணர்த்தினார். அத்தகைய பணிவு நமக்குள் பிறக்க வேண்டும்.

3. உண்மைத்தன்மை

பாவிகளை அரவணைத்த இயேசு, புனிதர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டவர்களைப் புறக் கணித்தார். விபசாரியைக் கூட மன்னித்து அன்பால் அறிவுரை சொன்னவர், தலைவர்களை நோக்கி ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே…’ என கர்ஜித்தார்.

உண்மைத் தன்மையை இயேசு நேசித்தார். ‘நான் பாவி’ என வருபவர்களை எப்போதும் அவர் புறம்பே தள்ளவில்லை. ‘நான் சுத்தமானவன்’ எனும் கர்வத்தோடு வருபவர்களை நிராகரிக்கத் தயங்கவும் இல்லை. இயலாமைகளை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ளும் உண்மைத்தன்மை நமக்குள் பிறக்க வேண்டும்.

4. உறுதி

லட்சியத்தில் உறுதியாய் இருப்பது எப்படி என்பதை இயேசுவின் வாழ்க்கை போதிக்கிறது. பூமியில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுவதே அவரது மனித வடிவின் நோக்கம். அந்த நிலையிலிருந்து இம்மியளவும் அவர் விலகவில்லை. மரணத்தின் கடைசி வினாடியிலும் மன்னிப்பை வழங்கினார்.

தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கும் கருணையை நீட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்தவனையும் ‘நண்பா’ என்றழைத்தார். தன்னை இகழ்ந்தவர்களுக்காய் செபித்தார். அறைந்தவர்களுக்காய் மன்னிப்பை வேண்டினார். கடைசி வினாடியில் கூட லட்சியத்திலிருந்து பின்வாங்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இறுதி வரை உறுதியாய் இருந்தார். அந்த உறுதி நமக்குள் பிறக்க வேண்டும்.

5. ஜெபம்

இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது. அதற்காக அவர் ஜெபித்தார். தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை. சோதனைகளை அடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது.

கர்வத்தை விரட்ட அவருக்கு ஜெபம் துணை செய்தது. வேதனைகளைக் கடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. லட்சியத்தில் நடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. ஜெபம்! சிங்கத்தின் வலிமையை சிற்றெறும்புக்கு ஊட்டும். சூரியனின் வெம்மையை தீக்குச்சிக்கும் தரும். ஜெபம், நமது பல வீனங்களை இறைவனின் பலத்தால் கடக்கும் உன்னத வழி. அந்த ஜெபம் நமக்குள் பிறக்க வேண்டும்.
Tags:    

Similar News