கிரிக்கெட்

ரோகித் சர்மா, ஆரோன் பிஞ்ச்

டி20 தொடரை வெல்லுமா இந்தியா?- ஆஸ்திரேலியாவுடன் இன்று கடைசி போட்டியில் மோதல்

Published On 2022-09-24 22:30 GMT   |   Update On 2022-09-24 22:30 GMT
  • ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தகவல்.
  • இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்பு.

ஐதராபாத்:

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தினால், கோப்பையை வெல்வதுடன் டி20 ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனை படைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

Tags:    

Similar News