வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? நாளை 2-வது 20 ஓவர் போட்டி
- முதல் போட்டியில் பெற்ற வெற்றியால் ரோமன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது.
- இதுவரை நடந்த 26 போட்டியில் இந்தியா 17-ல், வெஸ்ட்இண்டீஸ் 8-ல் வெற்றி பெற்றுள்ளன.
கயானா:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
ஐந்து 20 ஓவர் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கயானாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பதிலடி கொடுக்குமா?
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலு டன் எதிர் பார்க்கப்படுகிறது.
முதல் ஆட்டத்தில் 150 ரன் இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி தோற்றது பரிதாபமே. புதுமுக வீரர் திலக் வர்மா மட்டுமே பேட்டிங்கில் சாதித்தார். இதனால் மற்ற வீரர்கள் நாளை சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பந்து வீச்சில் அர்தீப் சிங், யசுவேந்திர சாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்குமா? என்று உறுதியாக தெரியவில்லை.
முதல் போட்டியில் பெற்ற வெற்றியால் ரோமன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி இந்தியாவை மீண்டும் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோமன் பாவெல், நிக்கோ லஸ் பூரன், பிராண்டன கிங் ஆகியோரும், பந்து வீச்சில் ஜேசன் ேஹால்டர், மெக்காய், ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 போட்டியில் இந்தியா 17-ல், வெஸ்ட்இண்டீஸ் 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.