கிரிக்கெட்

தமிழக அணியோடு இணையும் வாஷிங்டன் சுந்தர்- மும்பைக்கு எதிரான அரைஇறுதியில் ஆடுகிறார்

Published On 2024-02-28 09:03 GMT   |   Update On 2024-02-28 09:03 GMT
  • மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.
  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

சென்னை:

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் கால்இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 33 வித்தியாசத்தில் சவுராஸ்டிராவை வீழ்த்தி ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது.

மற்ற கால்இறுதி போட்டிகளில் மத்தியபிரதேசம் 4 ரன்னில் ஆந்திராவையும், விதர்பா 127 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவையும் தோற்கடித்தன. பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மும்பை அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

அரைஇறுதி ஆட்டங்கள் வருகிற 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் விதர்பா-மத்தியபிர தேச அணிகளும், மும்பையில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு-மும்பை அணிகளும் மோதுகின்றன.

மும்பை அணிக்கு எதிரான அரைஇறுதியில் தமிழகத்தின் முன்னணி சுழற்பந்து வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இதனால் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியோடு இணைந்து கொள்கிறார். அவரது வருகை சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்

இதேபோல மும்பை அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார். அவர் இந்திய அணியில் இருந்து 2-வது டெஸ்டுக்கு பிறகு நீக்கப்பட்டார்.

Tags:    

Similar News