கிரிக்கெட்

ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவரில் அதிக ரன்: மும்பையை பழி தீர்த்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Published On 2024-03-27 16:25 GMT   |   Update On 2024-03-27 16:25 GMT
  • 2021-ல் அபு தாபியில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 131 ரன்கள் அடித்திருந்தது.
  • 2014-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் அடித்திருந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் 2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடியது. அறிமுக வீரரான மபாகா 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் டிராவிட் ஹெட் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு 22 ரன்கள் கிடைத்தது.

4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 5-வது ஓவரின் முதல் பந்தில் மயங்க் அகர்வால் 13 பந்தில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரிகள் விளாசினார். ஒரு விக்கெட்டை இழந்தாலும் 13 ரன்கள் எடுத்தது.

5-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், டிராவிஸ் ஹெட் ஒரு சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரி அடிக்க 23 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.

7-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா 3 சிக்ஸ் விளாசினார். இதனால் இந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது. ஸ்கோர் 100 ரன்னைத் தாண்டியது. 8-வது ஓவரை கோட்சி வீசினார். இந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 24 பந்தில் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு பைஸ் பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தது. 9-வது ஓவரை ஹர்திப் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 11 ரன்கள் கிடைத்தது. 10-வது ஓவரை மபாகா வீசினார். இந்த ஓவரில் அபிஷேக் சர்மா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விளாசினார். இதனால் 20 ரன்கள் கிடைத்தது. மொத்தமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ஓவரில் 148 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் இதற்கு முன் 2021-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 131 ரன்கள் குவித்துள்ளது. 2014-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் 131 ரன்கள் எடுத்துள்ளது.

2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெக்கான் சார்ஜர்ஸ் 130 ரன்கள் எடுத்துள்ளது. 2016-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி 129 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

Similar News